நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கோலாகலமாக தொடங்கியது. 


விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிக்பாஸ்  என்றாலே நினைவுக்கு வருவது பிரமாண்ட வீடு தான். 


முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன் போட்டியாளர்களான யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, ரியோ, ரம்யா பாண்டியன், நிரூப், பிரியங்கா உள்ளிட்ட பலரும் ஆட்டம் ஆடி வரவேற்றனர். இவர்களை தொடர்ந்து வந்த கமல், ”வேட்டைக்கு தயாரா” என்ற முழக்கத்துடன் வீட்டின் உள்ளே சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த இடங்களை சுற்றிக் காட்டினார். 


 


முதல் ஆளாக வந்த “ஜி.பி.முத்து”







தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த பிரபல யூட்யூபரான ஜிபி முத்து என அறியப்படும் ஜி. பேச்சி முத்து முதல் ஆளாக பிக்பாஸ் போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ளார். இவர் கடந்த 2 சீசன்களாகவே பங்கு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பங்கேற்றுள்ளார். மேடையில் தோன்றிய அவர் தனது மனைவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்க வேண்டுமென விருப்பப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் இதுவரை தான் குடும்பத்தை பிரிந்து இருந்ததில்லை என கூறி அவர் கண்கலங்க கமல் அவரை சமாதானப்படுத்தி உள்ளே அனுப்பினார். 


2. வசந்த்குமார் என்ற அசல் கோலார் 




 


யூடியூப்பில் 30 மில்லியன் பார்வைகளைப் பெற்ற ஜோர்தலே ஆல்பம் பாடல் மூலம் புகழ் பெற்ற வசந்த்குமார் என்ற அசல் கோலார் 2வது போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ளார். இவர் தமிழில் பாரிஸ் ஜெயராஜ், பேச்சுலர், காபி வித் காதல் ஆகிய படங்களில் பாடியுள்ளார். 


3. திருநங்கை ஷிவின் கணேசன் 




சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரியும் திருநங்கை ஷிவின் கணேசன் 3வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். கடந்த சீசனில் பங்கேற்ற திருநங்கையான நமீதா மாரிமுத்துவின் வழிகாட்டுதலில் இவர் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 


4. சீரியல் நடிகர் முகம்மது அஸீம்




பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போது தனிமைப்படுத்துதல் வரை சென்று விட்டு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் வந்த சீரியல் நடிகர் முகம்மது அஸீம் 4வது போட்டியாளராக இதில் பங்கேற்றுள்ளார். இவருடன் பகல் நிலவு சீரியலில் நடித்த ஷிவானி அந்த சீசனில் கலந்து கொண்ட நிலையில் இவரும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இம்முறை பங்கேற்றுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


5. ராபர்ட் மாஸ்டர் 




நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ராபர்ட் மாஸ்டர் அழகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ள ராபர்ட் மாஸ்டர் 5வது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.


6. சீரியல் நடிகை ஆயிஷா 




பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 6வது போட்டியாளராக சீரியல் நடிகை ஆயிஷா பங்கேற்றுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் பிரபலமான இவர் இன்ஸ்டாகிராமில் 6 லட்சம் ஃபாலோவர்களை வைத்துள்ளார்.


7. ஷெரின் சாம் 




நடிகை, மாடல்  என அறியப்பட்ட ஷெரின் சாம் 7வது பிக்பாஸ் போட்டியாளராக களம் கண்டுள்ளார். இவர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான வினோதய சித்தம் படத்தில் நடித்துள்ளார். கேரளாவில் பிறந்து பெங்களூரில் வளர்ந்த ஷெரின் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்  மாடலிங் உலகில் அடியெடுத்து வைத்தார். மேலும் இவர்  சயாரா மோட்டார்ஸ் மற்றும் UVI ஸ்டுடியோ நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். 


8. மணிகண்டன் 




நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ் அவள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் உட்பட சில ரியாலிட்டி ஷோக்களில் தோன்றியுள்ளார். இவர் 8வது போட்டியாளராக பங்கேற்றுள்ளார். 


9.’சரவணன் மீனாட்சி’ ரக்‌ஷிதா 




விஜய் தொலைக்காட்சி தொடரான ​​சரவணன் மீனாட்சியில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை ரக்‌ஷிதா மகாலட்சுமி 9வது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இம்முறை ஆர்மி ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


10. ராம் ராமசாமி 




பெயரைக் கேட்டதும் வித்தியாசமாக இருப்பது போல கடந்த முறை பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் போல இம்முறை ராம் ராமசாமி என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். முன்னாள் டிவி தொகுப்பாளராக இருந்த  இவர் கிரிக்கெட்டிலும், மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் இவர் நடித்துள்ளார். 


11. பாடகர் தினேஷ் கனகரத்தினம்




இலங்கையைச் சேர்ந்த பின்னணிப் பாடகர், ஹிப் ஹாப் கலைஞரான தினேஷ் கனகரத்தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் களம் கண்டுள்ளார். தமிழ்த் திரையுலகில்  பல படங்களிலும் பாடியுள்ளார். சின்ன தாமரை, ஆத்திச்சூடி, சோக்காலி, தாரா ஆட்டாக்காரா உள்ளிட்ட பல பாடல்களில் சிறிய பகுதிகளை  இவர் பாடியுள்ளார். 


12. ஜனனி குணசீலன் 




இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான ஜனனி குணசீலன் மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். இவர் முதல் சீசனில் இருந்தே பங்கேற்க வேண்டும் என விருப்பம் கொண்டவராக இருந்துள்ளார். ஆனால் வயது காரணமாகவே தான் சீசன் 6ல்  ஜனனி கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 


13. சாந்தி அரவிந்த் 




தமிழ் சினிமாவில் பின்னணி நடனக் கலைஞராக பல படங்களில் பணியாற்றிய சாந்தி மாஸ்டர் 90ஸ் கிட்ஸ்களுக்கு மெட்டி ஒலி சீரியலில் டைட்டில் பாடலில் ஆடி பிரபலமானவர். சமீபகாலமாக சீரியல்களில் நடித்து வந்த அவர் இம்முறை பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி ஆகியுள்ளார். 


14. விக்ரமன் 




விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளரான விக்ரமன் இம்முறை போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


15. அமுதவாணன்




விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு, ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான அமுதவாணன் பிக்பாஸ் போட்டியாளராக இம்முறை களமிறங்கியுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் களமிறக்கப்படும் காமெடி நடிகர்கள் வரிசையில் இம்முறை அமுதவாணன் பங்கேற்றுள்ளார். 


16. விஜே மகேஸ்வரி 




பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக விஜே மகேஸ்வரி  கலந்து கொண்டுள்ளார். தொகுப்பாளினியாக தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கிய அவர் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி மனைவிகளில் ஒருவராக நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வரும் மகேஸ்வரி இந்த முறை முக்கியமானவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


17. விஜே கதிரவன் 




சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமான VJ கதிரவன் பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.


18. குயின்ஸி 




குயின்சி ஸ்டான்லி சன் டிவி ஒளிபரப்பான அன்பே வா சீரியலில் நடித்துள்ளார். தற்போது விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் பார்ப்பதற்கு நடிகை யாஷிகா ஆனந்த் போல இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 


19. நிவாசினி 




தமிழகத்தை பூர்விகமாக கொண்ட குடும்பத்தில் பிறந்து சிங்கப்பூரில் வசித்து வரும் ஒரு மாடல் ஆவார். சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவராக உள்ள நிவாசினி சவால் மிகுந்த போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என சொல்லப்படுகிறது. 


20. தனலட்சுமி




ஈரோட்டைச் சேர்ந்த பிரபல டிக்டாக்கரான சுகி தேவி என்கிற தனலட்சுமி சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் அதிகம் இருந்த நிலையில் டிக்டாக் தளத்தை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டு பிரபலமானார். டிக்டாக் தடைக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்யத் தொடங்கி அவரை பின்தொடர்பவர்கள் மட்டுமே  4 லட்சம் பேர் ஆவர்.