பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மிகவும் உறுதியான போட்டியாளராகக் கருதப்பட்ட ஷிவின் இறுதிச்சுற்றில் முதல் ஆளாக வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5ஆவது சீசனில் நமீதா மாரிமுத்து என்ற திருநங்கை கலந்துகொண்டார். ஆனால், இவர் சில நாட்களிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து இந்த 6ஆவது சீசனில் சிங்கப்பூரில் மாடலும் திருநங்கையுமான ஷிவின் கணேசன் பொது மக்களில் இருந்து ஒருவராகப் பங்கேற்றார். தொடக்கத்தில் ஷிவின் இந்நிகழ்ச்சியில் இரண்டு வாரங்கள் தாக்குபிடிப்பதே அதிகம் என நெட்டிசன்கள் கருதி வந்தனர்.
ஆனால் இந்தக் கருத்துகளை முறியடிக்கும் வகையில் தன் விளையாட்டின் யுக்திகளில் கெத்து காண்பித்த ஷிவின் வெகு சீக்கிரத்தில் தனி கவனம் ஈர்த்து லைக்ஸை அள்ளினார்.
குறிப்பாக வாரா வாரம் கொடுக்கப்படும் டாஸ்க்குகளை, தனிப்பட்ட முட்டல் மோதல்களில் இருந்து பிரித்துப் பார்த்து, விளையாட்டை சுவாரஸ்யப்படுத்தி லைக்ஸ் அள்ளியதோடு கமல்ஹாசனின் பாராட்டுகளையும் பெற்றார்.
”ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்கள்” என்ற டாஸ்க்கில் பேசிய ஷிவின், ஒட்டுமொத்த திருநங்கை சமூகத்தினரின் குரலாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாக அவர் கூறினார்.
இப்படி எந்தப் பின்புலமும் இன்றி நிகழ்ச்சிக்கு வந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த ஷிவின், டைட்டில் வெல்வார் என முதல் சில வாரங்களில் இருந்தே எதிர்ப்பார்க்கப்பட்டு வந்தது. தற்போது பெரும் அங்கீகாரம், சக போட்டியாளர்கள், மக்களின் அன்பு என அனைத்தையும் எடுத்துக் கொண்டு பெரு மகிழ்ச்சி, திருப்தியுடன் ஷிவின் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெளியேறியுள்ளார்.
க்ராண்ட் ஃபினாலே
ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் 105 நாட்களை கடந்த பிக்பாஸ் இன்றுடன் நிறைவடைகிறது.
21 போட்டியாளர்களில் விக்ரமன், அஸிம், ஷிவின் 3 பேரும் இறுதிப்போட்டிக்கான பட்டியலில் உள்ளனர். இவர்களில் யார் டைட்டில் வெல்லப்போகிறார்கள் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.