பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கலாமா என கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அஸிம் சொன்ன பதிலால் அரங்கத்தில் பலத்த கரவொலி எழுந்தது.
பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் ஜிபி முத்து, திருநங்கை ஷிவின் கணேசன், அசல் கோலார், நிவாஷினி, குயின்ஸி, சாந்தி, விஜே மகேஸ்வரி, அஸிம், ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா,நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி,ராம் ராமசாமி,விக்ரமன் மற்றும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர்.
ஆரம்பம் முதலே முந்தைய சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமலேயே சென்றது. ஆனாலும் திரை பிரபலங்கள் தவிர்த்து மக்கள் போட்டியாளர்களும் முதல்முறையாக களம் கண்டதால் பார்வையாளர்கள் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தனர்.
இறுதிப்போட்டி
இந்நிலையில் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது. விக்ரமன், அஸிம், ஷிவின் 3 பேரும் இறுதிப்போட்டிக்கான பட்டியலில் உள்ள நிலையில், இவர்களில் யார் பிக்பாஸ் டைட்டில் வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் அகம் டிவி வழியாக சென்ற கமல்ஹாசன் 3 பேரிடமும் வீட்டின் கடைசி நாள் எப்படி இருந்தது என கேட்டார்.
அதற்கு, “ரொம்ப அமைதியா இருக்கு. வழக்கமா பிக்பாஸ் சவுண்ட் இருக்கும். இப்ப ஃபைனல் பற்றிய பயமும் சேர்ந்து ஒரு மாதிரி இருக்கு” என ஷிவின் கூறினார். தொடர்ந்து, “அண்ணன் இத்தனை நாள் வாழ்ந்த வீட்டை காலி பண்ணிட்டு போகிற மாதிரி இருக்கு. 106 நாட்கள் இருந்திருக்கிறோம். ஒவ்வொரு இடமும் ஒரு நினைவுகளால நிறைஞ்சிருக்கு” என விக்ரமன் தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய அஸிம், “ரங்கராட்டினம் சுற்றுவது போல ஒரு மாதிரி திகிலா இருக்கு. விக்ரமன் சொன்னமாதிரி வீட்டை காலி பண்ற மாதிரி அமைதியா இருக்கு. இத்தனை நாளா நானே சமைச்சு, விரும்பி சாப்பிட்டு இருந்த எங்களுக்கு நேற்று முதல் விதவிதமா சாப்பாடு வருது. ரொம்ப பிரமாண்டமா இருக்குது. இந்த அலங்காரங்கள் எல்லாம் பார்க்கும் போது 106வது நாளில் டாப் 3 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என அஸிம் கூறினார்.
அப்போது கமல், இந்த போட்டியை இன்னும் 7 அல்லது 10 நாட்கள் நீட்டிக்கலாமா என்ற எண்ணம் எழுவதாக தெரிவித்தார். அதற்கு அஸிம் நான் ரெடி என கெத்தாக சொல்ல, விக்ரமன், ஷிவின் இருவரும் மனதை இங்கிருந்து கிளம்ப போகிறோம் என தயார் படுத்தி விட்டதாக தெரிவித்தனர்.