பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன் என கமல்ஹாசனிடம், நிகழ்ச்சியின் போட்டியாளர் விஜே கதிரவன் பதிலளித்துள்ளார். 


ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் 105 நாட்களை கடந்த பிக்பாஸ் இன்றுடன் நிறைவடைகிறது. 21 போட்டியாளர்களில் விக்ரமன், அஸிம், ஷிவின் 3 பேரும் இறுதிப்போட்டிக்கான பட்டியலில் உள்ளனர். இவர்களில் யார் டைட்டில் வெல்லப்போகிறார்கள் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 






பணப்பெட்டி சவால்


இதனிடையே  100 நாட்களை கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வார போட்டியாளர்களாக விக்ரமன், அஸிம், அமுதவாணன், ஷிவின், மைனா நந்தினி, விஜே கதிரவன் ஆகியோர் பங்கேற்றனர்.வழக்கம்போல பணப்பெட்டியை அனுப்பி போட்டியாளரை வெளியேற்றும் படலம் நடந்தது. இதில் முதலில் ரூ.3 லட்சம் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதனை  மைனா நந்தினி அல்லது அமுதவாணன் இருவரில் யாரேனும் ஒருவர் அதை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜே கதிரவன் பணப்பெட்டியுடன் வெளியேறினார். 


ஏன் பணப்பெட்டியை எடுத்தார்? 


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி எபிசோடில் கமல்ஹாசன் விஜே கதிரவனிடம் ஏன் பணப்பெட்டியை எடுத்தீர்கள் என்ற கேள்வியை கேட்டார். அதற்கு, ”விளையாட்டு இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டது. எனக்கு உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் டைட்டில் வெல்வதற்கு ரொம்ப சவாலாக இருப்பார்கள் என்ற எண்ணம்  தோன்றியது. வெளியேவும் எனக்கு டைட்டில் கிடைப்பது கஷ்டம் என்ற கருத்து இருப்பதாக நினைத்தேன். ஒருவேளை டைட்டில் கிடைக்கவில்லை என்றால் என்ன பண்ணலாம் என்ற சந்தேகம் இருந்தது. மக்களை எண்டெர்டெயின் பண்ணியாச்சின்னு ரூ.3 லட்சத்துடன் வெளியேறினேன்” என கதிரவன் தெரிவித்தார்.


உடனே கமல்ஹாசன் வெளியே போனதும் பரிசுத்தொகை அதிகமானது பற்றி என்ன நினைத்தீர்கள் என்ற கேள்வியை கேட்டார். அதற்கு, ”நான் ரொம்ப மனநிறைவுடன் இந்த வீட்டில் இருந்தேன். எனக்கு அந்த வார இறுதியில் உங்களை பார்த்து பேச முடியவில்லைன்னு வருத்தம் இருந்தது அவ்வளவு தான்” என கதிரவன் தெரிவித்தார். 


இதனைத் தொடர்ந்து, பணப்பெட்டியை எடுத்து விட்டால் மக்களின் இதயத்தை வெல்ல முடியும்ன்னு யார் சொன்னா என்ற கேள்வியை கமல் கேட்டுவிட்டு, ஏன் கேட்கிறேன் என்றால் பெட்டி எடுத்தவங்க எல்லாரையும் நிராகரிச்சிருக்காங்க. அது வேற இடம் என அரசியல் கேலி செய்தார். ஆனால் “எனக்கு இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதே பெருமை தான்” என விஜே கதிரவன் பதிலளித்தார்.