விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் சில நாட்களில் இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்று தெரிந்து விடும். இதுவரையில் ஒளிபரப்பான சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் போட்டியாளர்களிடையே வன்மம், வெறுப்பு என அனைத்தும் சற்று மேலோங்கி இருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து கடிந்துகொண்டு வருகின்றனர்.


இந்நிலையில், “பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி இருந்தது, உண்மையில் அங்கு என்ன நடக்கிறது” என்பது பற்றி தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் மமதி சாரி. பெரும்பாலானவர்களுக்கு இவர் நிகழ்ச்சியில் பங்கேற்றாரா என்பதே சந்தேகமாக இருக்கும். காரணம் முதல் எவிக்ஷனாக வெளியேற்றப்பட்டவர் மமதி சாரி. 


 



 


முதல் எவிக்ஷன்:


இந்நிலையில் மமதி பிக்பாஸ் பற்றி பேசியிருப்பதாவது: “ஓட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்ஷன் நடக்கிறதா எனக் கேட்டால் என்னுடைய வெளியேற்றம் அப்படி நடைபெற்றது அல்ல. காரணம் நான் முழு மனதுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவில்லை.


எனக்கும் சேனலுக்கும் இடையே இருந்த ஒப்பந்தங்களில் சில கருத்து வேறுபாடுகள் இருந்ததால் என்னால் உள்ளே சென்ற பின்னர் சக போட்டியாளர்களுடன் சகஜமாக விளையாட முடியவில்லை. அதனால் நான் முதலில் வெளியேற்றப்பட்டேன். பெரிய அளவில் எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மீது ஈடுபாடு இல்லை. அதனால் நான் அதை பார்ப்பதும் இல்லை. 


விளம்பரம் தான் காரணம் :


பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வரவேண்டும் என பலரும் ஆசைப்படுவதற்கு ஒரே காரணம் பப்ளிசிட்டி தான். நேஷனல் சேனல் என்பதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு பலருக்கும் வாய்ப்புகள் கைகூடும் என்றும் ஒரு சில நாட்களுக்காவது மக்களின் நியாபகங்களில் இருப்பார்கள் என்பதற்காகதான். இந்த நிகழ்ச்சி மூலம் அவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்” என வெளிப்படையாகப் பேசி இருந்தார் மமதி சாரி.


எழுத்தாளராகும் மமதி :


தொலைக்காட்சி சேனலில் மிகவும் பிரபலமான ஒரு தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் மமதி. தற்போது தனது எழுத்து திறமையை கூர்மைப்படுத்தி வருகிறார். சிறு வயது முதலே எழுத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட மமதி சாரி தற்போது இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளாராம். அவை இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். 


இன்றும் தொகுப்பாளினியாக கேட்டு பல வாய்ப்புகள் வருகிறதாம். இந்தக் காலகட்டத்தில் ஒருவரை காயப்படுத்தி, கிண்டல்  செய்து கலாய்த்தால் மட்டுமே ரசிக்கப்படுகிறது. அது போல செய்வதற்கு விருப்பமில்லாததால் தனக்கு மிகவும் விருப்பமான வழியில் பயணம் செய்து வருகிறாராம் மமதி.