திரையுலகில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை விசித்ரா வெளியே கொண்டு வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


90களின் காலக்கட்டத்தில் கவர்ச்சி நடிகையாகவும், காமெடி காட்சிகள் மூலமும் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை விசித்ரா. அன்றைய காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் நடித்தார். ஆனால் 2001 ஆம் ஆண்டுக்குப் பின் சினிமாவில் இருந்து விலகிய அவர், அதன்பின் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில்  கலந்து கொண்ட அவர், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். 


கிட்டதட்ட 50 நாட்களை கடந்துள்ள நிகழ்ச்சியில் விசித்ரா மிகவும் ஸ்ட்ராங்கான ஒரு போட்டியாளராகவே வலம் வருகிறார். இப்படியான நிலையில், நேற்றைய (நவம்பர் 21) எபிசோடில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதாவது, உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் உருவாக்கிய உலகத்திலும் அதிரும் படியான சம்பவங்கள் நடந்திருக்கும். அந்த சம்பவங்கள் உங்களை உருவாக்கி இருக்கலாம் அல்லது அடையாளம் காட்டி இருக்கலாம். பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் அது போன்று உங்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. 


இதில் நடிகை விசித்ரா பங்கேற்று பேசினார். அப்போது தான் ஏன் திரையுலகில் இருந்து விலகினேன் என்ற அதிர்ச்சி காரணத்தை விளக்கினார். அதாவது, “எல்லாருக்கும் என்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை பற்றிய தகவல்கள் தெரியும். 2001 ஆம் ஆண்டு திருமணத்திற்கு பிறகு நான் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்தேன். நான் நடிப்பிலிருந்து விலகி இருந்ததற்கு உண்மையான காரணத்தை மறக்க நினைக்கிறேன். அது யாருக்கும் தெரியாது, அந்த சமயத்தில் மிகப்பெரிய விஷயமாக மாறியது. அந்த சம்பவம் என் மனதில் மிகப்பெரிய காயமாக உள்ளது. 


டாப் ஹீரோவாக இருக்கும் நடிகர் நடிக்கும் படம் அது. அப்போது என்னுடைய கணவர் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் ஜெனரல் மேனேஜராக இருந்தார். அவர் என்னிடம் வந்து இன்றைக்கு பார்ட்டி இருப்பதால் நீங்கள் அனைவரும் வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். பார்ட்டியில் நான் அந்தப் படத்தின் ஹீரோவை சந்தித்தேன். அவர் என் பெயரைக் கூட கேட்காமல் நீங்கள் இந்த படத்தில் நடிக்கிறீர்களா? என கேட்டார். ஆமாம் என சொன்னதும் என்னுடைய அறைக்கு வாருங்கள் என சொன்னார்.


எனக்கு அந்த ஹீரோ அப்படி சொன்னது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. என்ன நடக்கிறது என புரியாமல் அன்றைக்கு இரவு என்னுடைய ரூமுக்கு சென்று நன்றாக பூட்டிக்கொண்டு தூங்கிவிட்டேன். ஆனால் அடுத்த நாளிலிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு பிரச்சனைகள் நடக்கத் தொடங்கியது. சாயங்காலம் ஆறு மணி ஆகிவிட்டால் அவர் குடித்துவிட்டு வந்து ரூம் கதவை தட்டும் சம்பவங்கள் நடைபெற்றது. எனக்கு அந்த சூழல் ரொம்ப கஷ்டமாக இருந்தது. எப்படி நாம் சமாளிக்க போகிறோம் என தெரியாமல் தவித்தேன். 


அப்போது என்னுடைய கணவர் அந்த ஹோட்டலில் ஜெனரல் மேனேஜராக இருந்ததால், என்னிடம் வந்து எந்த விதத்தில் நான் உங்களுக்கு உதவ வேண்டும் என கேட்டார்.  நான் தங்கி இருக்கும் எனது அறையை மாற்ற வேண்டும் என சொன்னேன்.  மேலும் நான் எங்கு இருக்கிறேன் என யாருக்கும் தெரியவே கூடாது எனவும் சொல்ல அவர் அதனை ஏற்றுக் கொண்டு உதவினார். அந்த ஷெட்யூல் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூமில் தான் நான் இருந்தேன். 


ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என நினைத்தது எனக்கு தெரியாது. மறுநாள் வழக்கம்போல் நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன். ஸ்டண்ட் மாஸ்டர்,ஃபைட்டர்ஸ் என எல்லாரும் வந்து விட்டார்கள்.  அது கிராமத்தில் நடக்கும் காட்சி. ஃபைட்டர்ஸ் உள்ளே வர கிராம மக்கள் சிதறி ஓடுவது போல காட்சியை நீங்கள் சினிமாவில் நிறைய பார்த்திருக்கலாம். அது மாதிரி எடுக்கப்பட்ட காட்சியின் போது ஒருவர் என்னை தகாத முறையில் தொடுவதை உணர முடிந்தது. இரண்டாவது முறையும் இதுபோல நடக்க மூன்றாவது முறை நடந்த போது அவரின் கையை பிடித்து விட்டேன். நேராக ஸ்டண்ட் மாஸ்டரிடம் அழைத்துச் சென்று நடந்ததை சொன்னேன். 


ஆனால் அவரோ என்னிடமிருந்து அந்த பைட் மாஸ்டரை விடுவித்துவிட்டு என் கன்னத்தில் ஒரு அறை விட்டார். நான் அப்படி அதிர்ச்சியில் உறைந்து போனேன். என்ன காரணத்திற்காக அவர் என்னை அடித்தார் என தெரியாமல் வெளியே கண்ணீருடன் வெளியே வந்து நிற்கிறேன். நடந்த சம்பவங்களை எனது பெற்றோரிடம் கூற முடியவில்லை. அதனால் என் ஃப்ரண்டுக்கு போன் பண்ணி இப்படி நடந்து விட்டது என்ன செய்யலாம் என கேட்டேன். அவரோ இதனை சும்மா விட வேண்டாம் புகார் அளிக்கலாம் என சொன்னார். 


உடனடியாக நான் அப்போது இருந்த நடிகர் சங்கத்திடம் இது தொடர்பாக தெரிவித்தேன். அங்கிருந்த தலைவர்கள் புகாரை கைப்பட எழுதிக் கொடுக்குமாறு தெரிவித்துவிட்டு, அந்த படத்தில் வேலை செய்ய வேண்டாம் திரும்பி வந்துவிடுமாறு கூறினார்கள். எனக்கு இந்த விவகாரத்தில் பெரிய வருத்தம் என்னவென்றால், அந்த சம்பவம் மிகப்பெரிய விஷயமாக நியூஸ் பேப்பரில் எல்லாம் வந்தது. ஆனால் எனக்காக யாரும் வந்து பேசவில்லை. 


குறிப்பாக ஒரு கட்டத்தில் அப்போது இருந்த நடிகர் சங்க செயலாளர் என்னிடம் நீங்கள் ஏன் போலீசுக்கு செல்லாமல் இங்கு வந்தீர்கள் என கேட்டார். கேரளாவில் உள்ள மலப்புழா ஏரியாவில் சம்பவம் நடைபெற்றது.  நான் சென்னைக்கு வந்து புகார் கொடுக்கவே இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. அப்போது நடந்த விஷயங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனது கணவர் அவரால் முடிந்த உதவிகளையும் செய்து கொண்டிருந்தார்.


ஆனால் எதுவும் நடக்கவில்லை. அப்போதுதான் எனக்கு இனிமேலும் தொடர்ந்து நடிக்க முடியுமா என்ற பயம் ஏற்பட்டது. அப்போது இருந்த தலைவர் இதையெல்லாம் மறந்துவிட்டு போய் வேலையை பாருமா என சொன்னது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. 


அதேசமயம் ஒரு இடத்தில் மரியாதை கிடைக்க வில்லை என்றால் அங்கு வேலை செய்து என்ன பிரயோஜனம் என என் கணவர் கேள்வி எழுப்பினார். அது எனக்கு பளார் என அறைந்தது போல் இருந்தது. பத்து வருஷம் போராடி கிட்டத்தட்ட நூறு படங்கள் நடித்துள்ளேன். நான் சினிமா துறையை எனது குடும்பமாக நினைத்தேன். ஆனால் சினிமா துறை அப்படி என்னை நினைக்கவில்லை. அதன் பிறகு சினிமா விட்டு விலகி விட்டேன். 


நான் சினிமாவில் எத்தனையோ ஹீரோவுடன் இணைந்து நடித்துள்ளேன். ஆனால் கண்ணியமான வாழ்க்கையை கொடுத்த என் கணவர் தான் எனக்கு ஹீரோ.  அந்த சம்பவம் என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய பூகம்பம் என்ன விசித்திரா தெரிவித்தார். 


முன்னதாக பிக் பாஸ் வீட்டில் ரெட் கார் கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதிப் விவகாரத்தில், தப்பு நடந்தபோதே அதனை அப்போதே வெளிப்படுத்தி இருக்க வேண்டும் என அவர் மீது குற்றம் சாட்டிய சக போட்டியாளர்களை விசித்ரா விமர்சித்திருந்தார். மேலும் இது தொடர்பாக பாலியல் வன்கொடுமை குறித்த ஒரு உதாரணத்தையும் அவர் மேற்கோள்காட்டி பேசினார். ஆனால் தப்பை எப்போது சொன்னாலும் அது தப்புதான் என்கிற ரீதியில் கமல்ஹாசனும் சக போட்டியாளர்களும் விசித்ராவுக்கு பதில் அளித்திருந்தனர்.


இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி பேசிய விசித்திரா, எதுவாக இருந்தாலும் உடனடியாக தெரிவிப்பதே தீர்வு கிடைப்பதற்கு வழியாகும் என தெரிவித்தார்.