கொரோனா முதல் அலையின்போது திரைத்துறை தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு செய்ய நவரசா என்னும் ஆந்தாலஜி வெப் தொடர் வெளியிடப்பட உள்ளது. மகிழ்ச்சி, கோவம்,காதல் என மனிதர்களுக்கே உரித்தான ஒன்பது உணர்வுகளை அடிப்பைடையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஒன்பது இயக்குநர்கள் இயக்க, மணிரத்தினம் மற்றும் ஜெயேந்தர் ஆகியோர் தயாரிக்கின்றனர். படத்தின் போஸ்டர்கள் வெளியாகி தொடர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றன.


சமீபத்தில் காதலை மையமாக வைத்து உருவாகி வரும் ‘கிட்டார் கம்பி மேல நின்னு’ குறும்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தை கலக்கின. இதில் சூர்யா நடித்துள்ளார், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.  இதேபோல கோபத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள குறும்படத்தை நடிகர் அரவிந்த் சாமி இயக்கியுள்ளார்.  நடிகராக மட்டுமே அறியப்பட்ட அரவிந்த்சாமி இந்த ஆந்தாலஜி மூலமாக இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இது சற்று கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் ஹீரோ , சாக்லேட் பாய் என அறியப்பட்ட அரவிந்த் சாமி சமீபத்தில் வில்லனாக நடித்து பலரை வியப்பில் ஆழ்த்தினார். தற்போது உருவாகியுள்ள ஆந்தாலஜி தொடரில்   'ரெளத்திரம்' எனப் பெயரிடப்பட்டுள்ள பகுதியை இயக்குகிறார் . இதில் ரித்விகா, ஸ்ரீராம், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 




இந்நிலையில் படத்தில் அரவிந்த் சாமி குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ரித்விகா, அதில் “ அரவிந்த் சாமி போன்ற புகழ்பெற்ற நடிகருடன் பணிபுரிவது என் வாழ்கையில ரொம்ப பெருமையான விஷயம் ,நடிகராக இல்லாமல்  தொழில்நுட்பங்களை  சிறப்பாக கையாளும் இயக்குநராக பார்க்கும் பொழுது மிகவும் வியந்தேன். இயக்கத்திற்கான நுணுக்கங்களை சரியாக பயன்படுத்தி அவர் காட்சிகளை வெளிக்கொண்டு வந்த விதம் அபாரமானது, எல்லாவற்றிற்கும் மேலாக அவை சுவாரஸ்யமாகவும் அசாரணமானதாகவும் இருந்தன. காட்சிகள் குறித்து ஆன்லைனில் நடத்தப்பட்ட பயிற்சி பட்டறை வகுப்புகள் எனக்கு அற்புத அனுபவமாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.கோவத்தை மையமாக வைத்து உருவாகி வரும் ‘ரௌத்திரம்’ பகுதியில் அன்புக்கரசி என்ற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் ரித்விகா. 






அரவிந்த்சாமி தவிர கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி, ப்ரியதர்ஷன், வஸந்த் உள்ளிட்டோர் மீதமுள்ள 8 பகுதிகளை இயக்கியுள்ளனர். இந்த ஆந்தாலஜியில் சூர்யா, சித்தார்த், பார்வதி, பிரசன்னா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா, அதிதி பாலன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பிரபல ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வருகிற ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி ’ நவரசா’ ஆந்தாலஜி தொடர் வெளியாக உள்ளது.இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் சம்பளம் இல்லாமல் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.