டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதலில் இன்று ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு போட்டிகளுக்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் திவ்யான்ஷ் பன்வார் மற்றும் தீபக் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில் தகுதிச் சுற்றில் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வார் 102.7,103.7, 103.6,104.6,104.6,103.6 என மொத்தமாக 622.8 புள்ளிகள் பெற்று 33ஆவது இடத்தை பிடித்தார். அதேபோல் மற்றொரு இந்திய வீரரான தீபக் குமார் 102.9,103.8,103.7,105.2,103.8,105.3 என மொத்தமாக 624.7 புள்ளிகள் பெற்று 26ஆவது இடத்தை பிடித்தார். இந்தத் தகுதிச் சுற்றுகளில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்வார்கள். இதனால் திவ்யான்ஷ் சிங் பன்வார் மற்றும் தீபக் குமார் ஆகிய இருவரும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
முன்னதாக இன்று காலை நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் யாஷஸ்வினி தேஷ்வாய் ஆகிய இருவரும் தகுதிச் சுற்றில் 11ஆவது மற்றும் 12ஆவது இடம்பிடித்து ஏமாற்றம் அளித்தனர். அதேபோல் நேற்று மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சந்தேலா ஆகிய இருவரும் தகுதிச் சுற்றுடன் வெளியேறினர்.
அதன்பின்னர் நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியா சார்பில் சவுரப் சௌதரி மற்றும் அபிஷேக் வெர்மா ஆகியோர் பங்கேற்றனர். அவர்களில் அபிஷேக் வெர்மா தகுதிச் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். சவுரப் சௌதரி தகுதிச்சுற்றில் முதல் இடம்பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார். எனினும் இறுதிப் போட்டியில் 7ஆம் இடம் பிடித்து அவரும் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதன்மூலம் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆகிய இரண்டிலும் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் சேர்த்து 8 இந்தியர்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒருவர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த இரண்டு பிரிவுகளிலும் அடுத்து கலப்பு பிரிவு போட்டிகள் நடைபெற உள்ளன. அதிலாவது இந்திய வீரர் வீராங்கனைகள் சிறப்பாக செயல்படுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் : வெற்றியுடன் தொடங்கினார் பி.வி.சிந்து..!