பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக உள்ள வினுஷா தேவி, தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் குறித்து பேசியுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று (அக்டோபர் 1) கோலாகலமாக  தொடங்கியுள்ளது.  இந்நிகழ்ச்சியை தொடர்ந்து 7வது ஆண்டாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி - ஞாயிறுகளில் இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணி வரையும் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான வினுஷா தேவியும் இடம் பெற்றுள்ளார்.


வினுஷா தேவியின் சோகக்கதை 


பிக்பாஸ் சீசனில் 6வது போட்டியாளராக நுழைந்தார் வினுஜா தேவி. அவரை வரவேற்ற கமல், ஒரு சிறப்பு வீடியோ ஒன்றை ஒளிபரப்பினார். அதில், “நான் குழந்தையாக இருக்கும் போது அப்பாவை பிரிந்து விட்டேன். அப்போது இருந்தே அம்மாவின் அரவணைப்பில் தான் வளர்ந்து வந்தேன். அவர் என்னை தனியாளாக கஷ்டப்பட்டு வளர்த்தார்கள். எனக்கு மாடலிங்கில் ஆர்வம் இருந்த நிலையில், கருப்பு நிறமாக இருந்ததால் ஒதுக்கினார்கள். எந்த இடத்துக்கு போனாலும் ஒல்லியான உடல், கருப்பன நிறம் ஆகியவற்றை காரணம் காட்டி அவமானப்படுத்தி ஒதுக்கினார்கள். ஆனால் நான் துவண்டு போகவில்லை. தொடர்ந்து போராடினேன். அப்போது தான் எனக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  இந்த வீட்டில் என்னை வினுஜாவாக பார்ப்பார்கள் என அந்த வீடியோவில் அவர் தெரிவித்திருந்தார். 






இதனைத் தொடர்ந்து பேசிய கமல், வெளிப்புறம் கருப்பாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் மனம் வெள்ளையாக இருக்க வேண்டும். உங்களுடைய நிறம் தான் இந்த மண்ணின் நிறம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதனிடையே அவருக்கு நான்கு கருப்பு வைரம் பரிசாக அளிக்கப்பட்டது. பின்னர் பேசிய வினுஜாவின் தாயார், “என் மகள் என்னை விட தைரியமானவர். அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்” என தெரிவித்தார். 


திரையுலக வாழ்க்கை 


விஜய் டிவியில் பிரபலமான “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடித்த ரோஷினி ஹரிப்பிரியன் விலகியதால் அவருக்கு பதிலாக வினுஷா தேவியை சீரியல் குழுவினர் தேர்வு செய்தனர். முதல் சீசன் இறுதிக்கட்டத்தில் கண்ணம்மா கேரக்டரில் இணைந்த அவர், இரண்டாம் சீசனில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் அந்த சீரியல் 2வது சீசனில் சரியான டிஆர்பி ரேட்டிங்கில் செல்லாததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.