பிக் பாஸ் சீசன் 7 இன் முதல் போட்டியாளரான கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு, பின் தன் பதவியை விட்டுக்கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் 7
இன்று பிக்பாஸ் 7ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல் போட்டி உலகக் கோப்பை, தொலைக்காட்சி தொடர்கள் போல் இரவானால் குடும்பங்கள் சேர்ந்து பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் மாறியுள்ளது. பெரியவர்கள் பெண்கள் குழந்தைகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் இந்த நிகழ்ச்ச்சி கவர்ந்துள்ளது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் இன்று 7 ஆவது சீசன் தொடங்கியிருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வரிசையாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறார்கள்.
கூல் சுரேஷ்
வழக்கம் போல் கமல்ஹாசன் தனது ஸ்டைலில் பிக் பாஸ் வீட்டை சுற்றிகாட்டியப் பின், முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு பிரசாந்த் நடித்த சாக்லேட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சுரேஷ்.
தொடர்ந்து ஸ்ரீ, காதல் அழிவதில்லை, காக்க காக்க, திருடா திருடி தொடங்கி நடப்பாண்டு வெளியான பகாசுரன், டிடி ரிட்டர்ன்ஸ்,சந்திமுகி 2 வரை நடித்துள்ளார். நடிகர் சிலம்பரசனின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ், அவரது படங்களுக்கு சென்று ப்ரோமோஷன் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 2022 ஆம் ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் சொன்ன வசனங்களெல்லாம் இணையத்தில் மிகப்பெரும் ட்ரெண்டானது. மேலும் எல்லா படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து கூல் சுரேஷ் சொல்லும் விமர்சனம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம்.
கண்கலங்கிய கூல் சுரேஷ்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் கலந்து கொண்டுள்ளார். “சம்மர்ல சந்தோஷமா இருப்பிங்க.. கூல்-ன்னு பேர் வச்சிருக்கீங்க, குளிர்காலத்துல குளிராதா” என்ற ஜோக்கோடு கமல் அவரை வரவேற்றார். நான் பிக்பாஸ் வர காரணம் சிலம்பரசன், சந்தானம்,என்னுடைய நண்பர்கள் தான் என கூறி கண்கலங்கினார். அவரைத் தேற்றிய கமல் “ஆரம்பமே சந்தோஷமாக கொண்டு போலாம் என நினைத்தேன். ஆனால் உங்களால காரியமே கெட்டுப் போயிரும் போலயே” என கூறினார்.
கேப்டன் சுரேஷ்
தன்னைப் பற்றிய அறிமுக வீடியோ ஒன்றைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டில் முதன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக இருப்பதில் மிகப்பெரிய சலுகை என்னவென்றால் ஒரு வாரத்திற்கு இந்த வீடு கேப்டனின் கட்டுபாடுக்குள் இருக்கும். அதே நேரத்தில் கேப்டனாக இருக்கும் ஒருவரை யாருன் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்ய முடியாது. இந்த சலுகைகளை கூல் சுரேஷ் அனுபவிக்க வேண்டும் என்றால் அவருக்கு ஒரே ஒரு சவால் இருக்கிறது. அதாவது இரண்டாவதாக வரும் போட்டியாளருடன் விவாதம் செய்து தனது கெப்டனாக இருக்க தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் அப்படி நிரூபிக்காவிட்டால் கேப்டனாக இருக்கும் தகுதியை கூல் சுரேஷ் இருந்துவிடுவார்.
ஆரம்பமே போர்க்களம்
இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக வந்த பூர்ணிமாவுக்கும் கூல் சுரேஷூக்கும் யார் கேப்டனாக இருப்பது என்று கடுமையாக விவாதம் நடந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த கூல் சுரேஷ் தானே முன்வந்து அரை மனதாக தனது கேப்டன் பதவியை விட்டுக் கொடுத்தார். கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாமல் போன வருத்தம் கூல் சுரேஷின் முகத்தில் தெரியாமல் இல்லை!