Sherina: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை செரினாவுக்கு, கார் ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் பிரபலம்:


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சில பிரபலங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற செரினா பிரபலமாக தொடங்கினார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் நடிகையாகவும், மாடலாகவும் இருந்த நிலையில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறியப்பட்டார்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மலையாளத்தில் பேசி கமல்ஹாசனிடம் வார்னிங் வாங்கிய செரினா, தனக்கென தனி ரசிகர்களை பெற்றிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த இவர், சமுத்திரகனி இயக்கிய வினோத சித்தம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகை செரினா தனக்கு வாட்சப் மூலம் தவறான நோக்கத்தில் தொல்லை வருவதாக புகார் அளித்துள்ளார். 

ஆபாச பேச்சு, கொலை மிரட்டல்:


இது தொடர்பாக சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் செரினா புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது முன்னாள் கார் ஓட்டுநரான கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவர் தொலைபேசியில் ஆபாசமாக பேசுவதுடன், வாட்சப் மூலம் கொலை மிரட்டல் விடுவதாக புகார் அளித்துள்ளார். பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டது. 

 

செரினாவின் இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் மயிலாடுதுறையில் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர். செரினாவின் கார் ஓட்டுநராக இருந்த கார்த்திக் மயிலாடுதுறையை சேர்ந்த ரவுடி ஒருவரின் தம்பி என்பதும், அது குறித்து தெரிய வந்ததும் கார் டிரைவர் பணியில் இருந்து கார்த்திகை செரினா நீக்கியதாகவும் கூறப்படுகிறது. அதனால், செரினாவுக்கு கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.