பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் இன்னும் பிரபலம் அடைந்து விடுகின்றனர். சினிமா சின்னத்திரை பிரபலங்கள் மட்டும் அல்லாமல் யூடியூப் பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். தமிழில் பிக் பாஸ் 7-வது சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் தற்போது இரண்டு வீடுகள் செட் போடப்பட்டு இருப்பதாகவும், போட்டியாளர்கள் இரண்டு டீம்களாக பிரிக்கப்பட்டு அந்த வீடுகளில் தங்க வைக்கப்பட உள்ளனர். ஒருகட்டத்தில் அந்த இரண்டு வீடுகளும் ஒன்றாக இணைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.  


பிக் பாஸ் 7-வது சீசனுக்கு யாரெல்லாம் போட்டியாளராக வர இருக்கின்றனர் என உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  அதில் முதல் ஆளாக தனியார் நியூஸ் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்தான் வர போகிறார் என தகவல் கசிந்துள்ளது.


'பார்ப்பதற்கு அப்பாவி போல இருக்கும் இவர்தான்..' என  ஸ்டோரிகளுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்து பாப்புலர் ஆன ரஞ்சித் பிக்பாஸ் வந்தால் அவருக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 


பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் சீரியல் நடிகர் அசீம், அரசியல் பிரமுகர் விக்ரமன், யூடியூப் பிரபலம் ஜி.பி. முத்து, நடிகை ரச்சிதா, வி.ஜே. மகேஷ்வரி உள்ளிட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஜி. .பி முத்து ஏற்கனே பிரபலமாகவே இருந்தார். யூடியூபில் வெளியாகும் அவரின் அப்பாவித்தனமான பேச்சுக்கென்றே பல ஆண் ரசிகர்கள் இருந்தனர்.


அவர் ஆபாசமாக பேசுவதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டினாலும் அவருக்கு கணிசமான ஆதரவும் இருந்து வந்த நிலையில்தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எண்ட்ரி கொடுத்தார். 


ஆரம்பத்தில் ஜி.பி. முத்துவிற்காகவே சிலர் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கினர். பின் நடத்தப்பட்ட போட்டிகள் மூலம் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றது. அசீம் மற்றும் ஹவுஸ் மேட்ஸ் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவியது. அசீம் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாக பல போட்டியாளர்கள் அவர் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். அசீம் மீது நெகட்டிவ் ஷேட் விழுந்தது. நாளடைவில் ஏராளமான ஹவுஸ் மேட்ஸ் அசீமுக்கு எதிராக திரும்பினர். ஆனால் இதுவே அசீமுக்கு திருப்பு முனையாக அமைந்தது. ஆம் அவரின் நெகட்டிவ்வான நடவடிக்கைகளை ரசிக்க ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.


இணையத்தில் அசீமுக்கு ஆதரவாக மீம்கள் வைரலானது.  ஒரு கட்டத்தில் அசீமின் நடவடிக்கைகளால் கடுப்பான கமல்ஹாசன், அவரை வறுத்தெடுக்க ஆரம்பித்தார். இங்குதான் பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பு குழுவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அசீமை தட்டிக்கேட்ட கமல்ஹாசனை அசீமின் ரசிகர்கள் சிலர் கலாய்த்து இணையத்தில் மீம்களை பறக்க விட்டனர். அசீமின் ரசிகர்கள் பக்குமற்றவர்கள், நாகரீகம் அற்றவர்கள் என்றெல்லாம் கமலின் ரசிகர்களும் நடுநிலையாளர்களும் வெகுண்டெழுந்தனர்.


ஒரு கட்டத்தில் விக்ரமுக்கும் - அசீமுக்கும் நேரடியாகவே மோதல் போக்கு ஏற்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் வாடை அடிக்கத் தொடங்கியது.  விக்ரம் ரசிகர்களும், அசீம் ரசிகர்களும் வார்த்தை போரில் களம் கண்டனர். இறுதியாக அசீம் பிக்பாஸ் கோப்பையை வென்றார். இதற்கு சில பிரபலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். தற்போது 7-வது சீசன் தொடங்க உள்ள நிலையில் போட்டியாளர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்? நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.