பாசிச பாஜக ஒழிக என கோஷமிட்ட பெண்ணுக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 


கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்துகொண்டிருந்த அன்றைய பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜனை நோக்கி அதே விமானத்தில் பயணம் செய்த சோஃபியா என்ற பெண், “ பாசிச பாஜக ஒழிக” என கோசமிட்டார். இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைதும் செய்யப்பட்டார். அதன் பின்னர் ஜாமீனில் வெளிவந்த நிலையில், வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் அதாவது, இன்று ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை சோஃபியாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 



கடந்த 2018ஆம் ஆண்டு சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌவுந்தரராஜன் பயணம் செய்தார். விமானத்தில் அவருக்கு சில இருக்கைகள் தள்ளி தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண் பெற்றோருடன் பயணம் செய்தனர். 


தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்த சோஃபியா பயணம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்து பேசி வந்துள்ளார். இதையடுத்து விமானப் பயணம் முடிந்து விமானத்தில் இருந்து இறங்கி நடந்து வரும்போது “பாசிச பாஜக ஒழிக” என கோஷமிட்டார். 




சோஃபியாவின் கோஷத்திற்கு தமிழிசை சௌவுந்தரராஜனும் அவருடன் இருந்த பாஜக ஆதரவாளர்கள் சிலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தன்னுடைய கருத்துரிமை எனக் கூறி பாசிச பாஜக ஒழிக தொடர்ந்து கோஷமிட்டுள்ளார் சோஃபியா. ஆனால், சோஃபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார் என்றும் சோஃபியா அதற்கு மறுத்திவிட்டார் என்றும் அவரது வழக்கறிஞர் ஊடகங்களிடம் அப்போது தெரிவித்திருந்தார். 


மேலும் இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து சோஃபியா கைது செய்யப்பட்டார். இதையடுத்து சோஃபியா ஜாமினில் விடுவிக்கப்பட்டிருந்தார். நீதிமன்றம் குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். இந்நிலையில், இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சோஃபியா மீது தமிழிசை சௌந்தரராஜன் கொடுத்த புகாரை அடுத்து தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்துள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ததற்கான காரணமாக, பெருநகர சென்னை காவல் துறையின் சட்டப்பிரிவை தூத்துக்குடி காவல்துறை பயன்படுத்தி வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், இதனால் தான் வழக்கு ரத்து செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.  




Senthil Balaji Brother: அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் அமலாக்கத்துறையில் சரண்டராக முடிவு - வழக்கறிஞர் தகவல்