அறம் எங்கே செல்லுபடியாகும் எனத் தொடங்கும் கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளான க்ரேண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நேற்று மாலை தொடங்கி நடைபெற்று முடிந்தது.


ஷிவின், விக்ரமன், அஸீம் என மும்முனைப்போட்டியில் கடந்த சில நாள்களாக பிக்பாஸ் களம் சூடுபிடித்திருந்த நிலையில், நேற்றைய இறுதி நிகழ்வில் அஸீம் வெற்றி பெற்று பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை வென்றார்.


அசீம் வெற்றி:


ஆண், பெண் பாலினங்கள் தாண்டி திருநங்கைகள் சமூகத்தினரை நார்மலைஸ் செய்து மக்களிடம் கொண்டு சென்றதுடன் தன் சிறப்பான கேம் ப்ளேவால் ரசிகர்களை ஈர்த்த ஷிவின், அறம் வெல்லும் என்ற கோட்பாட்டை முன்வைத்து நிதானமாகவும் நேர்மையுடனும் விளையாடி வந்த விக்ரமன் ஆகிய இருவரில் ஒருவர் தான் வெற்றி பெறுவார்கள் என்றே தொடக்கம் முதல் பலரும் கணித்து வந்தனர்.




ஆனால், பிக் பாஸில் ஆரம்பம் முதலே கட்டுப்பாடின்றி கோபத்தை வெளிப்படுத்தி, வாராவாரம் கமல் அறிவுரை சொல்லுமளவுக்கு நெகட்டிவ் இமேஜை முன்னிறுத்தி விளையாடி வந்த அஸீம் டைட்டில் வென்றது நெட்டிசன்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.


அதிருப்தியில் ரசிகர்கள்:


பிக் பாஸில் வரலாற்றுப் பிழை, பாய்காட் விஜய் டிவி, தீமை தான் வெல்லும் என்றெல்லாம் நேற்று மாலை முதலே தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி பொங்கித் தீர்த்தனர்.


இந்நிலையில், இந்நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசனுக்கும் நேற்றிரவு முதல் சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.


பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன், பிக் பாஸ் முதல் சீசன் தொடங்கியே தன் வீக் எண்ட் எபிசோட்களில் அரசியல் சார்ந்த கருத்துகளை முன்வைத்து வந்துள்ளதுடன், தன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் குரலாகவும் ஒலித்து வந்தார் என்றே சொல்லலாம்.


சம கால அரசியல் நிகழ்வுகள் பற்றி வாராந்திர எபிசோடுகளின் மத்தியில் பூடகமாகவும், நேரடியாகவும் பேசி வந்த கமல், ஊழல், லஞ்சம் ஆகியவற்றைக் கண்டித்தும் நேர்மை, அறம் சார்ந்த கருத்துகளை முன்வைத்து வந்துள்ளார்.


கமல் மீது விமர்சனம்:


இந்நிலையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்வில் சக போட்டியாளரை மோசமாக அவமானப்படுத்துவது தொடங்கி, ரெட் கார்டு கொடுக்கும் அளவுக்கு சென்ற அஸீம் வெற்றிபெற்றது ஏற்புடையது அல்ல என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் ஓட்டுகளை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் என்றாலும், தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கூட தகுதியான போட்டியாளரை தேர்ந்தெடுக்கச் செய்ய கமலால் முடியவில்லை எனவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


இந்நிலையில், அறம் எங்கே செல்லுபடியாகும் எனத் தொடங்கும் ட்விட்டர் பதிவு ஒன்றினை கமல்ஹாசன் முன்னதாகப் பகிர்ந்துள்ளார்.


அறம் எங்கே?
 
அதில், “அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய விடுதலைப் போரில் மறம் என்கிற ஆயுதத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். அவரது 126 ஆவது பிறந்த நாளில் அவரது வீரத்தைப் போற்றுவோம்” என  நேதாஜி பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக முன்னதாக கமல் பதிவிட்டுள்ளார்.


 






பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அறம் வெல்லும் என்பதை மேற்கோள் காட்டி விளையாடி ரசிகர்களைப் பெற்ற விக்ரமன் இரண்டாம் இடம் பிடித்தது வியூவர்களை ஏற்கெனவே கடுப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், அறம் எங்கே செல்லுபடியாகும் எனத் தொடங்கும் கமலின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.






மேலும் விஜய் டிவியிடம் அறத்தை எதிர்பார்க்காதீர்கள் என கமல் சொல்கிறார் என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட அறத்தை நிலைநாட்ட முடியாத நீங்கள் அறத்தைப் பற்றி பேசாதீர்கள் என்றும் காட்டமாக ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.