திருவண்ணாமலையில் அருணை தமிழ் சங்கத்தின் சார்பாக தமிழர் திருவிழா நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மறைமலர் அடிகளார் விருது, முத்துலட்சுமி அம்மையார் விருது, கலைவாணர் விருது, கிருபானந்த வாரியார் விருது மற்றும் அருமை தமிழ் சங்கம் சார்பில் பொங்கலையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி மற்றும் கோலப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் விழா திருவண்ணாமலை நடைபெற்றது.


 




இந்த நிகழ்வில் பேசிய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு;


தொல்காப்பியத்தை படித்தால் மட்டுமே தமிழ் உணர்வு இருக்கும் என்று பொருள் அல்ல, காலத்துக்கு ஏற்ப தமிழ் உணர்வு இருக்க வேண்டும். இயல், இசை, நாடகம் தமிழ்கள் உள்ளிட்ட முத்தமிழ்களிலும் புலமை பெற்றவர் முன்னாள்  முதலமைச்சர் கருணாநிதி. என்னை போன்றவர்களுக்கு கலைஞரிடம் ஈர்ப்பு ஏற்பட்டது இந்த உணர்வால். தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்தவுடன் தான் பிறந்த மண்ணுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி சட்டத்தை இயற்றியவர் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை. தமிழ்நாடு என்று பெருமை பெற்றதற்கு காரணம் அண்ணா அவர்கள் தான். அண்ணாவை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் பேருந்துகளில் திருவள்ளுவரின் திருக்குறளை எழுத ஆணையிட்டவர். கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் தான் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று ஆணையிட்டவரும் கருணாநிதி தான் என உரையாற்றினார். இந்த மேடையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தமிழுக்காக தான் இயற்றிய பாடல் வரிகளை ஓர் ஆயிரம் நிலவே வா என்ற மெட்டின் மூலம் பாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.




 


நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழின் வரலாற்றை அடையாளப்படுத்தும் விதமாக கீழடியில் தொல்லியல் துறையின் சார்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், குறிப்பாக கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து என்று மத்திய அரசு வழங்கி உள்ளதாகவும், தமிழ் மொழியில் பல்வேறு விருதுகளை தற்போது திமுக அரசு வழங்கி வருவதாகவும், தமிழர்களுடைய நூல்களை நாட்டுடைமை ஆக்கியதும் திமுக அரசுதான் என்றும் உரையாற்றினார்.


பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருட்கள் அனைத்தும் தமிழர்களுக்கு என தனி நாகரிகம் இருந்ததை அடையாளப்படுத்துகிறது என கூறினார். 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத படிக்க தெரிந்த தமிழினம் இருந்தது என்பதை உணர்த்துவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். முன்னதாக தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் பாரத நாட்டியம், கிராமியப்பாடல், பட்டிமன்றம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.