கடந்த 2021ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா முதல் பாகம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் செம்ம கெத்தாக நடித்த அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இதன் மூலமாக தெலுங்கு திரையுலகில் தேசிய விருது வாங்கிய முதல் நடிகர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இதனையடுத்து தற்போது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது.
புஷ்பா 2 படத்தில் நடிக்க இருந்த நடிகர்கள்:
பிரம்மாண்ட பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இத்திரைப்படம் முதல் நாளே யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு வசூலில் சாதனை படைத்து வருகிறது. விமர்சன ரீதியாகவும் இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. ஆனால் இயக்குநர் சுகுமார் முதன் முதலில் புஷ்பா படத்தை இயக்க தீர்மானித்த போது அவரது எண்ணத்தில் இருந்தது இந்த 3 பேருமே கிடையாதாம்.
மகேஷ் பாபு:
இயக்குநர் சுகுமார் முதன் முதலில் தனது புஷ்பா ராஜ் கதாபாத்திரத்திற்கு நடிக்க அணுகியது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவைத் தானாம். இந்த கதை செம்மரக்கடத்தல் தொடர்பானது, ஆனால் மகேஷ் பாபுவோ இதுவரை நல்லவர் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் தனக்கு நெகட்டீவாக அமைந்துவிடக்கூடாது என்பதால் நடிக்கமாட்டேன் என மறுத்துவிட்டாராம்.
சமந்தா:
அதேபோல் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க சமந்தாவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் 'ரங்கஸ்தலம்' படத்திற்குப் பிறகு திரையில் கிராமத்துப் பெண்ணாக நடிக்க சமந்தா விரும்பவில்லையாம். அதனால் அந்த வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி:
இதை எல்லாம் விட ஹைலைட்டான விஷயம் படத்தில் முக்கியமான வில்லனாக வரும் ஃபகத் பாசில் கதாபாத்திரம் தான். இதில் முதலில் நடிக்கவிருந்தது நமது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தானாம். பன்வர் சிங் ஷெகாவத் வேடத்தில் நடிக்க சுகுமார் அவரைக் கேட்டபோது, விஜய் சேதுபதியிடம் தேதி இல்லையாம். அதனால் தான் புஷ்பா படத்தில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்களோ பிக்பாஸ் தொகுத்து வழங்க நேரமிருக்கு இதுக்கு நேரமில்லையா? இப்படி ஒரு மாஸான கேரக்டரை மிஸ் பண்ணிட்டீங்களே விசே என புலம்பி வருகின்றனர்.