தனக்கு அரசியல் தொடர்புகள் இருப்பதாகவும், அதை பயன்படுத்தி ஆளுநர் பதவி தருவதாகவும் பொய் வாக்குறுதி அளித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியிடம் ₹5 கோடி மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமானது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.15 கோடி - ஆளுநர் பதவி?
இந்த ஆண்டு, ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, நாசிக்கில் உள்ள ஒரு விடுதி ஒன்றில், சென்னை விஞ்ஞானி நரசிம்ம ரெட்டியும் நாசிக்கைச் சேர்ந்த குல்கர்னி ரெட்டியும் சந்தித்ததாக கூறப்படுகிறது. அப்போது, நாசிக்கைச் சேர்ந்த குல்கர்னி என்பவர், நரசிம்ம ரெட்டியிடம் ஆளுநர் பதவியை பெற்று தருவதாக, பொய்யான வாக்குறுதி அளித்திருக்கிறார்.
மேலும், தனக்கு அரசியல் ரீதியாக பலருடன் தொடர்பு இருப்பதாகவும், இந்திய அரசின் முத்திரையுடன் கூடிய சில ஆவணங்களையும் காண்பித்து நம்ப வைத்திருக்கிறார்.
ஆளுநர் பதவி வாங்கித் தர வேண்டும் என்றால் ரூ. 15 கோடி தர வேண்டும் என்றும், அதற்கு ஈடாத, தனக்குச் சொந்தமான 100 ஏக்கர் நில ஆவணத்தை தருவதாகவும், ஆளுநர் பதவி கிடைத்தவுடன் , 100 ஏக்கர் நில ஆவணத்தை திருப்பி வாங்கி கொள்வதாகவும் குல்கர்ணி கூறியுள்ளார்.
புகார்
இதையடுத்து, குல்கர்னி கூறியதை நம்பிய நரசிம்ம ரெட்டி, அவரது உறவினர்கள் உள்ளிட்டோரிடம் பணம் வாங்கி, 60 லட்சம் ரூபாய் ரொக்கமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ரூ.4.49 கோடி ரூபாய் குல்கர்னியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியிருக்கிறார். கிட்டத்தட்ட ரூ. 5 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
சில நாட்கள் செல்ல நரசிம்ம ரெட்டிக்கு சந்தேகம் ஏற்படிருக்கிறது. இதுதொடர்பாக , குல்கர்னியிடம் கேட்டதற்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத்துதான், கடந்த டிசம்பர் 7ஆம் தேதி மும்பை நாகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Also Read: TN Rain: ஆட்டம் காட்ட ஆரம்பித்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு” எந்த மாவட்டங்களுக்கு கனமழை..லிஸ்ட் இதோ.!
கைது:
இதையடுத்து, காவல்துறை துணை ஆணையர் பிரசாந்த் பச்சாவ் மற்றும் காவல் உதவி ஆணையர் சந்தீப் மிட்கே ஆகியோர் இந்த வழக்கை முதன்மைப்படுத்தி குற்றவாளிகளை பிடிக்குமாறு மத்திய குற்றப்பிரிவுக்கு அறிவுறுத்தினர்.
இதனை தொடர்ந்து, மும்பை நாகா காவல்துறை, தொழில்நுட்ப பகுப்பாய்வு உதவியுடன், குல்கர்னியை, சனிக்கிழமை இரவு (டிசம்பர் 7) கைது செய்து, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
இந்நிலையில், ஆளுநர் பதவி வாங்கி தருவதாக கூறி, சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி ரூ. 5 கோடி மோசடியில் சிக்கிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.