பிக்பாஸ் புகழ் நடிகர் கவின், தனது நண்பர்களுடன் மாலை அணிவித்து ஐயப்பன் கோயிலுக்குச் சென்றுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கார்த்திகை வந்துவிட்டால் காற்றில் ஐயப்பன் மனமும் வந்துவிடும். சுவாமிக்கு நெய்யபிஷேகம் செய்து இருமுடி கட்டி, கறுப்பு உடை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்தச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் தான் கார்த்திகையின் அடையாளம். 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் கொரோனா உலகை ஆட்கொண்டது. இந்தியாவில் 2020 மார்ச்சில் இருந்து தான் கொரோனா வேகமெடுத்தது. அதனால் 2020 கார்த்திகையில் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல கடுமையான கட்டுப்பாடு இருந்தது. இதனால் வருடாவருடம் சபரிமலை செல்லும் பக்தர்கள், தங்கள் வீடுகளின் அருகிலுள்ள கோயில்களில் மாலை அணிந்து விரதத்தை முடித்தனர். தற்போது சில கொரோனா கட்டுப்பாடுகளுடன், சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் வருகை சபரிமலையில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் புகழ் கவின் ஐயப்பனுக்கு மாலை அணிந்து நண்பர்களுடன் சபரிமலைக்கு சென்றுள்ளார். இதில் என்ன இருக்கிறது எனக் கேட்காதீர்கள். அந்த நண்பர்கள் தான் இதில் ஹைலட். கவினுடன் நெருங்கிய நண்பர்களான கனா படத்தின் ஹீரோ சத்யராஜ் தர்ஷன் மற்றும் பிக்பாஸ் வீட்டிலிருந்தபோது கவினை கண்ணத்தில் அறைந்த இன்னொரு நண்பர் பிரதீப் ஆண்டனி ஆகியோரும் ஐயப்ப சாமிக்கு மாலை அணிந்து சபரிமலைக்கு சென்றுள்ளனர். இதுகுறித்து கவினின் நண்பர் பிரதீப் ஆண்டனி ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. அவர் அந்த ட்வீட்டில், சக மனிதர்களை கடவுளாக பார்க்க வைக்கும் எல்லா கடவுள் வழிபாடும் வரவேற்கத்தக்கவை. பிரசாத நெய்யில் பண்ண பொங்கல் சூப்பரா இருந்துச்சு. இந்த அனுபவத்திற்கு நன்றி. நல்லா இரு. பெரியா ஆளா வா. #EmMadhamumNamMadham #KanniSami என்ற ஹேஷ்டேகுகளின் கீழ் இதனைப் பதிவு செய்துள்ளார்.
கவின் தனது லிப்ட் படத்தின் வெற்றிக்காக ஐயப்பனை வேண்டிக்கொண்டார். கவினுக்கு காலில் காயம் இருந்த போதிலும், அவர் ஐயப்பன் கோயிலுக்குச் சென்றுள்ளார்.
இதனைக் குறிப்பிட்டுள்ள பிரதீப் ஆண்டனி, காயத்தோடும் கவின் மலை ஏறுவதை பார்க்கும்போது மிகவும் உத்வேகமாக இருந்தது. கவினுக்கு ஆதரவாக அவனுடன் என்னால் இருக்க முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். செம்ம மச்சா நீ என்று கூறியுள்ளார். கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் விஜய் டிவிக்குள் நுழைந்தவர் கவின். சரவணன் மீனாட்சி சீரியலில் அவர் நடித்த வேட்டையன் கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய புகழையும், ரசிகர்களையும் தேடித்தந்தது. பிக்பாஸ் சீசன் 3 கவினுக்கு புதிய அடையாளத்தைக் கொடுத்தது.
கவின் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் தோன்றியது நட்புனா என்னனு தெரியுமா (2019) திரைப்படம். ஆனால் அவருக்கு நடிகராக பெயர் வாங்கித் தந்தது சமீபத்தில் வெளியான லிஃப்ட் படம் தான். லிஃப்ட் அவருக்குக் கொடுத்த லிஃப்ட்டால், கவின் அடுத்ததாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் ஊர்க்குருவி படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் அருண் கே இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் நடிகை வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.