“இறந்தவர்களை பற்றி பேசக்கூடாது... ஆம் நீதி, நியாயம், தர்மம்... இவையெல்லாம் செத்துவிட்டது. அதைப்பற்றி நாம் பேசக்கூடாது...” என்று கூறி மேடையை அதிர செய்தவர் ராமசாமி... 


யார் இந்த ராமசாமி... ராமசாமி என்றால் யாருக்கும் எதுவும் தெரியாது. நமக்கு தெரிந்த ஒரே ராமசாமி, ஈ.வே.ராமசாமிதான். ஆனால் சோ என்றால் தெரியாத ஆட்களே இருக்கமாட்டார்கள். 2K கிட்ஸ் இதில் அடங்கமாட்டார்கள். சோ என்றாலோ சோ ராமசாமி என்றாலோதான் அனைவருக்கும் தெரியும். வழக்கறிஞர், நாடக நடிகர், திரைப்பட நடிகர், கதையாசிரியர், இயக்குநர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என தன்னுடைய பரிணாமத்தை மாற்றிக்கொண்டே இருந்தார் சோ. துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியரான சோ, தனது அரசியல் நையாண்டி எழுத்துகள் மூலமே 'பத்திரிக்கை உலகில்' தனி இடத்த வகுத்துக் கொண்டார். 




பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் கதையை நாம் பலமுறை கேட்டிருப்போம். ஆனால், அதில் கை தேர்ந்தவர் சோ. அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சியையும் முடிந்தவரை போகிற போக்கில், தனக்கே உரிய நக்கல் பாணியில் விமர்சித்துவிட்டு, பின்னர் அவர்களையே தனிப்பட்ட முறையில் அரவணைத்து கொள்ளவும் தவறமாட்டார் சோ. முன்னாள் முதல்வர் காமராஜர், எம்ஜிஆர், ஜெயப்பிரகாஷ் நாராயண், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர் சந்திரசேகர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் மூப்பனார் உள்ளிட்டோரும் இவர்களில் அடங்குவர். 




அரசியல் வேறு நட்பு வேறு என்பதை மிகவும் நுணுக்கமாக கையாண்டவர். உயரத்தில் கையிறு கட்டி நடக்கும் ஒருவர், கீழே விழாமல் இருக்கவும் தன்னுடைய இலக்கை அடையவும் இரண்டு பக்கமும் சரியான நேரத்தில் சாய்ந்து கொடுத்து பெறுவார். அதுபோலதான் அரசியலில் எந்த பக்கமும் சாய்ந்துவிடக்கூடாது என்பதைவிட, அரசியல் பாதையில் எங்கே எப்படி செல்ல வேண்டும் என்ற நுணுக்கம் சோவுக்கு நன்றாகவே தெரியும்.  


காமராஜருக்கும் இந்திராகாந்திக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோது, இருவருக்கும் இடையே அரசியல் தூதுவராகவும் சோ செயல்பட்டிருக்கிறார். தனிப்பட்ட முறையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும், சோவுக்கும் இடையே நெருக்கமான பாசம் உண்டு. ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆலோசனை கூறுபவராகவும் சோ கருதப்பட்டு வந்தார். 


இருப்பினும் 1996-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுகவுக்கு மாற்றாக, நடிகர் ரஜினிகாந்த் ஆதரவுடன் திமுக, காங்கிரஸ் கூட்டணி உருவாவதற்கும் காரணமாக இருந்தார் சோ. 2011ஆம் ஆண்டு விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததிலும் சோவுக்கு முக்கிய பங்குண்டு. தமிழகத்தையே தனது ஆளுமையால் அடக்கியாண்ட ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்கு பின் ஒருவருக்கு தலைவணங்கினார் என்றால் அது சோ வின் அன்பினால் பெற்ற பாக்கியமாகவே பார்க்க வேண்டும். 




தனது துக்ளக் பத்திரிகையின் ஆண்டுவிழாவின் மூலம் மோடியை தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவரும் இதே சோ தான். மோடியால் ராஜகுரு என அழைக்கப்பட்டவர் சோ. இதன்மூலம் பாஜகவுக்கு சோ பக்கபலமாக இருக்கிறார் என்ற கருத்தும் நிலவியது. ஆனால் கிடைத்த நேரத்தில் பாஜகவையும் விமர்சிக்க தவறியதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. 


அரசியல் ரீதியாக சோவால் அதிகமாக விமர்சிக்கப்பட்டவர் திமுக தலைவர் கருணாநிதி. 2ஜி வழக்கில் திமுகவையும், கருணாநிதியையும், ராசாவையும், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும் கடுமையாக எதிர்த்து வந்தார் சோ. இருப்பினும், கருணாநிதி உடல்நலம் குன்றியிருந்தபோது, சோவும், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இருவரும் நேரில் சென்று நலம் விசாரித்துக் கொண்டனர். 




அதேபோல் தனது இறுதி காலத்தில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையில்தான் சோவும் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலமின்றி நவம்பர் 29ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சோ. அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி டிசம்பர் 7 ஆம் தேதியான இதே நாளில் காலமானார். ஜெயலலிதாவின் மறைவு அறிவிக்கப்பட்ட அடுத்த இரண்டு நாட்களில் சோ காலமானார். 


சோவின் 1971ஆம் ஆண்டு வெளிவந்த துக்ளக் தர்பார் போதும். அவர் அரசியலில் எவ்வளவு பெரிய ஜீனியர்ஸ் என்பதை காட்டும். 
அவருடைய சோ என்ற பெயர் வந்த கதையே ஒரு சுவாரஸ்யம். தனது 20 வயதில் நாடகம் பார்த்தபோது ராமசாமிக்கு நாடகத்தின்மீதான மோகம் தொற்றிக்கொண்டது. அதன்பின்னர், நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். 




பகீரதன் என்பவர் எழுதிய `தேன்மொழியாள்` என்ற மேடை நாடகத்தில்தான் சோவிற்கு ‘சோ’ என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த நாடகத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயரையே தன் புனைப்பெயராக பின்னர் மாற்றிக் கொண்டார்.


சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவர் ரா. ஸ்ரீநிவாசன் - ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று பி.எஸ்.சி படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953-55ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று பி.எல் பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். இவருக்கு 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். 




தனது துக்ளக் பத்திரிகையின் ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் சோ வின் அரசியல் நையாண்டி பேச்சுக்கு என்றே ஒரு கூட்டம் கூடும். அப்பேற்பட்ட அரசியல் வித்வான் சோ வின் மறைவு அனைவருக்கும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது என்பதற்கு மாற்றுக்கருத்து யாரும் சொல்ல முடியாது.