பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமல்ஹாசன் சக போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்போது மாயா, பூர்ணிமா, விசித்ரா, விஜே அர்ச்சனா, தினேஷ், கூல் சுரேஷ், ரவீனா தாஹா, சரவண விக்ரம், ஜோவிகா விஜயகுமார், நிக்ஸன், விஷ்ணு விஜய் உள்ளிட்ட பலரும் உள்ளே உள்ளனர். மேலும் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகிய இருவரும் மீண்டும் உள்ளே வந்துள்ளனர். 


இப்படியான நிலையில் கமல்ஹாசன் இந்த வாரம் இவரை கேள்வி கேட்க வேண்டும், அவர் நம்மிடம் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்ல வேண்டும் என்ற நிகழ்வுகள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பூர்ணிமா ரவி மற்றும் மாயா கிருஷ்ணா அணியினர் இதுதொடர்பான உரையாடல்களில் ஈடுபட்டு வருவதை காணலாம். இப்படியான நிலையில் கமலும் இந்த அணியினருக்கு ஆதரவாக பேசுகிறாரோ என்றெல்லாம் விமர்சனம் எழுந்து வருகிறது. இதனிடையே தன் மீதான விமர்சனங்களுக்கு கமல்ஹாசன் பதிலளித்து பேசியுள்ளார். 






பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய (நவம்பர் 26) எபிசோடில், ‘உள்ளே யார் விமர்சனத்தை தாங்கி கொள்ளாதவராக இருக்கிறார்?’ என்ற கேள்வியை எழுப்பினார். அப்போது பேசிய அவர், ‘இப்போது எனக்கும் விமர்சனங்கள் வருகிறது. அதனை தாண்டி தான் வந்து கொண்டிருக்கிறேன். நல்ல விமர்சனங்களை எல்லாம் ஏற்கிறேன். மேலும் இங்கு யாரும் என்னை இதை கேட்க வேண்டும், அதை கேட்க வேண்டும் என சொல்ல முடியாது. கேட்கவில்லை என்றால் என்ன பண்ணி விடுவீர்கள்? . நீங்களும் சம்பளம் வாங்குறீங்க, நானும் வாங்குறேன். அதனால் மரியாதை கொடுங்க. இங்க யாரும் என்னோட ஃபேவரைட் கிடையாது. 


உங்க கடமைக்கு மரியாதையும், வேலைக்கு மரியாதையும் நீங்க கொடுக்கணும். இதையெல்லாம் ஒத்துகிட்டு கையெழுத்து போட்டு தானே வந்துருக்கீங்க. நீங்க நான் என்ன சொல்லணும்ன்னு எனக்கு டயலாக் எழுதி கொடுக்காதீங்க. நான் யாரையும் டயலாக் எழுதி கொடுக்க வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் அதற்கு முன் அனுபவம் வேண்டும் என்று தான் சொல்கிறேன். இதில் எத்தனை பேருக்கு அனுபவம் இருக்குது. எனக்கு இருக்கு, இருந்தாலும் உங்க டயலாக்கை நான் எழுத மாட்டேன். அப்படி எழுதினால் நீங்க மெருகேறி விடுவீர்கள். இந்த விளையாட்டை நான் கெடுத்து விட்ட மாதிரி ஆகிடும். எல்லா கேரக்டர்களையும் சரிசமமாக வைத்து, அவர்கள் நியாயத்தை எடுத்துக் காட்ட வேண்டும் என்பது தான் ஒரு நல்ல திரைக்கதை ஆசிரியரின் வேலை. அதனை நான் இங்கு செய்ய மாட்டேன். எல்லாரும் திருந்தி நல்லவங்களாக மாறி விட்டால் இந்நிகழ்ச்சியே நல்லாருக்காது. 


உங்களுடைய விமர்சனங்களையே நான் உன்னிப்பாக கவனிப்பேன். அதில் எனக்கு கோவமே வராது. நான் மீம்காகவோ, மேம் காகவோ எல்லாம் பயப்பட மாட்டேன். நான் சொல்றது சரின்னு நம்பிட்டேன் என்றால் போற வரைக்கும் போவேன். ஆனால் நம்புறதுக்கு முன்னாடி தீவிர ஆராய்ச்சி மேற்கொள்வேன். நம்பினால் வரும் விளைவுகளை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு அளவுக்கு மேல் ஒரு விஷயத்தை நம்பக்கூடாது. அது வியாதியாக மாறிவிடக்கூடாது. அப்படி மாறினால் சரி செய்யக்கூடிய மருந்து அன்பு மட்டும் தான்" என பேசியிருந்தார் கமல்ஹாசன்