இயக்குநர் சீனு  ராமசாமி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து நடிகை மனிஷா யாதவ் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் என்ன நடந்தது என்பது பற்றி விளக்கமளித்துள்ளார். 


அதில், “நான் இடம் பொருள் ஏவல் படத்தை விட்டு வெளியேறிய நிலையில், என்னுடைய காட்சிகள் இரண்டு நாட்கள் கூட ஷூட் செய்யப்படவில்லை. திடீரென்று நான் நீக்கப்பட்ட சம்பவம் நடந்தது. அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமானவள் இல்லை அல்லது அதில் என்னால் நடிக்க முடியாது என்று இயக்குனர் கருதி படத்திலிருந்து நீக்கியிருந்தால் எந்த சந்தேகமும் ஏற்பட்டிருக்காது. ஆனால் அநாகரீகமாக பேசிய அவரின் பேச்சுகளை நான் ரசிக்கவில்லை  என்பதால் நீக்கப்பட்டது எனக்கு மிகப்பெரிய அளவில் காயத்தை ஏற்படுத்தியிருந்ததால் யாரிடமும் சொல்லாமல் இருந்தேன். சீனு ராமசாமியோ நான் நடிக்க முடியாது என கூறியதாக திரைத்துறையில் இருந்த அனைவரிடமும் சொல்லி விட்டார் என நினைக்கிறேன்.


இதனிடையே கடந்த வாரம், சீனு ராமசாமியின் அலுவலகத்திலிருந்து எனக்கு திடீரென அழைப்பு வந்தது,  அவரின் புது படத்தில் முக்கியமான கேரக்டர் இருப்பதாகவும், நடிப்பீர்களா எனவும் கேட்டனர். அந்த அழைப்பு மிகவும் வித்தியாசமாக தோன்றியது. இத்தனை வருடங்களாக நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளாத போது அவர் என்னை ஏன் திரும்பவும் அழைக்கிறார் என்று நான் ஆச்சரியப்பட்டேன்.


என்னை இடம் பொருள் ஏவல் படத்தில் இருந்து வெளியேற்றிய விதத்தைப் பார்த்து அவருடன் பணியாற்ற நான் விரும்பவில்லை. அவர் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தபோது, ​​நான் ஒரு யோகா மையத்தில் இருந்தேன். என் அம்மாவிடம் கூட இதுபற்றி, “சீனு ராமசாமியிடம் இருந்து அழைப்பு வந்ததை உன்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?” என கேட்டேன். ஆனால் ஊடகடங்கள் என்னைத் தொடர்புகொண்டு அந்த துன்புறுத்தல் பிரச்சினை பற்றி கேட்டபோது தான் அதற்கான பதில் எனக்கு கிடைத்தது. 


இப்பிரச்சினைக்கு நான் ஒரு குப்பைக்கதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனக்கு நன்றி சொல்வதை காட்டி சீனு ராமசாமி நியாயப்படுத்துவது மிகவும் அபத்தமானது. அந்த மேடையில் அவர் இருந்ததால் தொழில் தர்மத்தின்படி அப்படி கூறியிருந்தேன். மேலும் இடம் பொருள் ஏவல் படத்தின் ஒரு காட்சியில் நான் 28 டேக்குகளை எடுத்தேன் என்று சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார்.


எனது நடிப்பு சார்ந்த கேரக்டர்களுக்காக மக்கள் என்னை அறிந்திருக்கிறார்கள். எனக்கு அந்த காட்சியில் 28 டேக்குகள் எடுத்ததாக ஞாபகம் இல்லை. ஆனால் அன்றைக்கு இருந்த மன நிலையில் 128 டேக்குகள் எடுத்திருந்தால் கூட ஆச்சரியமாக இருந்திருக்காது. அதேபோல் அவரது அறிக்கையைப் பார்த்ததும், "இவ்வளவு நம்பிக்கையுடன் பேசுவதற்கும், மோசமாகப் பொய் சொல்லுவதற்கும் அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?" என்றே தோன்றியது. நான் எனது சொந்த ஊரில் இருப்பதால் மீடியாக்களிடம் பேச மாட்டேன் என்று நினைக்கிறாரா அல்லது தான் பெரிய இயக்குநர் என நினைப்பதால் அவர் படத்தில் நான் நடிப்பேன் என நம்புகிறாரா? என தெரியவில்லை. 


நல்ல மனிதர்களாக இருக்கும் பெரிய இயக்குனர்களிடம் நான் பணியாற்றியிருக்கிறேன். திறமைசாலிகளாக இருந்தும்  அடிப்படை உணர்வு இல்லாதவர்களை நான் விரும்பவில்லை. என்னைத் தொழில் தெரியாதவள் என காட்டுவதற்காக  சில ஆதாரமற்ற விஷயங்கள் கூறப்படுகின்றன. நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. காரணம் இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. 


மேலும் இந்த சர்ச்சையில் என்னை இழுத்துவிட்ட நிலையில், இதைப் பற்றி தொடர்ந்து பேச நான் விரும்பவில்லை. இந்த நேரத்தில் எனது கணவர், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இத்துறையில் இருக்கும் நலம் விரும்பிகள் எனக்கு பெரும் ஆதரவு கொடுத்ததற்கு நான் கடவுளுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.