விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்திய திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு வருகிறது. இதுவரை நடைபெற்ற 4 சீசன் போட்டிகளும் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், நடப்பாண்டிற்கான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஆயத்த பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டது. போட்டியாளர்கள் யார், யார் என்பதில்தான் உறுதியான தகவல்கள் வெளியாகாமல் இருந்தது. டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு சென்னை, பூந்தமல்லியில் உள்ள பிரம்மாண்ட அரங்கில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், டிக்டாக் புகழ் ஜி.பி. முத்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஜி.பி.முத்து, பூந்தமல்லியில் பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெறும் அரங்கத்தின் முன்பு நின்று கொண்டு போஸ் கொடுப்பது போல உள்ளது.
இந்த புகைப்படத்தின் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து பங்கேற்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. எஞ்சியுள்ள போட்டியாளர்கள் பற்றிய எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை. இளம் நடிகர்கள், மூத்த நடிகர்கள், நடிகைகள் என்று பல்வேறு வயது கலவையான வயதுடைய நபர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உண்டு.
இந்தியாவில் கடந்தாண்டு தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி மூலம் தனது நகைச்சுவையான பேச்சு மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஜி.பி.முத்து. இவரது ஆஸ்தான உச்சரிப்பான “செத்த பயலே, நாரப்பயலே” என்ற இரு வார்த்தைகள் தமிழகம் முழுவதும் பிரபலம். தற்போது ஜி.பி.முத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதை அவரது ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள ஜி.பி.முத்துவிற்கு ஏராளமான ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டிக் டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து தற்போது சன்னி லியோன் தமிழில் நடிக்கும் திரைப்படம் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் போட்டியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், குக் வித் கோமாளி புகழ் கனி, திரு, புகழ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ரக்ஷிதாவுடன் ஜோடியாக நடித்த இர்பானும் இந்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பல்வேறு நபர்களின் பெயர்களும் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளதாக வெளியாகி வருகிறது.
Ajith Bike Trip: 5000 கிமீ திட்டம்.. உலகைச் சுற்றும் "தல"...! ரஷ்யாதான் "ஆரம்பம்"..!