நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் 250 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த 1 ம் தேதி தமிழக அரசு அறிவிப்பின் படி பள்ளி தொடங்கி நடைபெற்று வருகிறது. பள்ளி திறக்கப்பட்டவுடன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, பள்ளிகல்வித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 


இந்த வகையில் மாணிக்கம்பாளையம் அரசு பள்ளியில் கடந்த 1 ம் தேதி 55 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று பெறப்பட்டது. இதில் மாணிக்கம்பாளையம் அரசுபள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ப்பட்டது.




உடனடியாக அந்த மாணவி மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மாணவிக்கு தொற்று பாதிப்பு மிகக் குறைவாக இருந்ததை அடுத்து மாணவி வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இதனையடுத்து மாணவியின் வகுப்பில் உடன் பயின்று வரும் 44  மாணர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாணவியின் பெற்றோர், அவருடன் தொடர்பில் உடனிருந்த அனைவருக்கும் நேற்று மாலை கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இன்று பள்ளி வளாகம் முழுவதும் உள்ளாட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டனர். மேலும்  மாணவிகள் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. மேலும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்


 முன்னதாக, பள்ளிகள் திறப்பு குறித்த அறிவித்த தமிழக அரசு, 1.9.2021 முதல் பள்ளிகளில் 9, 10 , 11 மற்றும் 12ம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத்திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். மேற்படி, உயர்வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதனடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து 15.9.2021க்கு பிறகு ஆலோசித்து அறிவிக்கப்படும்.அனைத்து கல்லூரிகளும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையில் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன