தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ரஷ்யாவில் நிறைவு பெற்றது.


படப்பிடிப்பு நிறைவு பெற்றும் நடிகர் அஜித்குமார் ரஷ்யாவிலே தங்கியுள்ளார். அவர் ரஷ்யாவிலே தங்கியிருப்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அஜித்குமார் நடிகராக மட்டுமின்றி துப்பாக்கி சுடுதல், ஏரோ மாடலிங், கார் ரேஸ், பைக் ரேஸ் என்று பல துறைகளில் திறமை வாய்ந்தவராகவும், நிபுணத்துவம் பெற்றவராகவும் வலம் வருபவர். நடிகராவதற்கு முன்பு அஜித்குமார் பைக் ரேஸராக வேண்டும் என்றே விரும்பினார்.




தற்போது, ரஷ்யாவில் தங்கியுள்ள அஜித் அந்த நாட்டில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தனது இருசக்கர வாகனத்திலே பயணிக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான புகைப்படங்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் செல்வது போலவும், பைக் ரேஸ் உடையுடன் அஜித் ரஷ்யாவில் தனது நண்பருடன் இருப்பது போலவும் புகைப்படங்கள் வௌியாகியுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.  அஜித்குமாருக்கு நெருக்கமான சில நபர்கள், நடிகர் அஜித் தனது இருசக்கர வாகனம் மூலமாகவே உலக சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.


முன்னதாக, நடிகர் அஜித்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு தனது இருசக்கர வாகனத்தின் மூலமாக சென்றிருந்தார். அப்போது, சுமார் 10 ஆயிரத்து 800 கிலோ மீட்டர் வரை அஜித் தனது இருசக்கர வாகனத்திலே சென்றிருந்தார். தற்போது ரஷ்யாவில் தனது இருசக்கர வாகனம் மூலமாகவே 5 ஆயிரம் கிலோமீட்டர் மேற்கொள்ள உள்ளார். விரைவில் அடுத்தடுத்து பல்வேறு நாடுகளிலும் நடிகர் அஜித்குமார் தனது இருசக்கர வாகனம் மூலமாகவே வலம் வர உள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.




நடிகர் அஜித் தனது இளம் வயது முதலே ஏராளமான பைக் மற்றும் கார் ரேஸ்களில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநில அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித், அந்த போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கங்களை வென்றார். அதன்மூலம் தேசிய அளவிலான போட்டியில் விளையாடுவதற்கும் தகுதி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ரஷ்யாவில் "தல": சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் அஜித்தின் நியூ ஸ்டில்ஸ்!