105 நாள்களைக் கடந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று (ஜன.22) மாலை தொடங்கி ஒளிபரப்பானது.
பிக்பாஸ்:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்றைய இறுதிப் போட்டியில் ஷிவின், விக்ரமன், அஸீம் என மும்முனைப்போட்டியில் ஒருவருக்கொருவர் சளைக்காத போட்டியாளர்களுடன் பிக்பாஸ் களம் சூடு பறக்க கிராண் ஃபினாலே மேடையை அலங்கரித்தனர்.
ஆண், பெண் பாலினம் கடந்து திருநங்கைகள் சமூகத்தினரை நார்மலைஸ் செய்து மக்களிடம் கொண்டு சென்றதுடன் தன் சிறப்பான கேம் ப்ளேவால் ரசிகர்களை ஈர்த்த ஷிவின், அறம் வெல்லும் என்ற கோட்பாட்டை முன்வைத்து நிதானமாகவும் நேர்மையுடனும் விளையாடி வந்த விக்ரமன் இருவரில் ஒருவர் தான் வெற்றி பெறுவார்கள் என்றே தொடக்கம் முதல் பலரும் கணித்து வந்தனர்.
ஆச்சரியப்படுத்திய அசீம் வெற்றி:
ஆனால், பிக் பாஸில் ஆரம்பம் முதலே கட்டுப்பாடின்றி கோபத்தை வெளிப்படுத்தி, வாராவாரம் கமல் அறிவுரை சொல்லுமளவுக்கு நெகட்டிவ் இமேஜை முன்னிறுத்தி விளையாடி வந்த அஸீம் டைட்டில் வென்றது நெட்டிசன்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பிக் பாஸில் வரலாற்றுப் பிழை, பாய்காட் விஜய் டிவி, தீமை தான் வெல்லும் என்றெல்லாம் நேற்று மாலை முதலே தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி பொங்கித் தீர்த்தனர்.
விக்ரமனுக்கு ஆதரவாக நவீன்:
குறிப்பாக தன் விளையாட்டில் சுய மரியாதையை இழுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது, கண்ணியம் பேண வேண்டும், என்பது தொடங்கி, எப்படிப்பட்ட சண்டைகளிலும் தன்னிலை மறக்காமல், சரியான கருத்துகளை உரக்கச் சொல்லி தன் கொள்கைகளை சமரசம் செய்து கொள்ளாமல் மக்களின் குட்புக்ஸில் இடம்பெற்ற விக்ரமன் டைட்டில் வெல்லாதது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
இந்நிலையில், முன்னதாக விக்ரமனுக்கு ஆதரவாக இயக்குநர் விக்ரமன் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், “சில ஆயிரம் ஆண்டுகளாக நம் மனங்களில் விதைக்கப்பட்டிருக்கும் மடமைகளை, ஒரு நூறு ஆண்டில் அகற்றுவதென்பது MissionImpossibleதான். முழு சமத்துவம் அடையாவிடினும் பெரியார் அம்பேத்கரின் வெற்றி பெரியதே. ஒரு நூறு நாள்களில் தோழர் ஆர்.விக்ரமன் வெற்றியும் அப்படியே சமத்துவ அறத்தின் வெற்றியே இது” எனப் பதிவிட்டுள்ளார்.
இரண்டாம் இடத்தைப் பிடித்தபோதும் அறம் வெல்லும் என்று கூறியே விடைபெற்ற விக்ரமனுக்கு ஆதரவாக நவீன் பகிர்ந்த இந்த ட்வீட் லைக்ஸ் அள்ளி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.