காற்றில் கீதமாய் ஒலித்த பவதாரிணியின் மறைவு உலக தமிழர்கள்  அனைவரையும் உலுக்கி உள்ளது. இளையராஜா - ஜீவா ராஜாய்யாவுக்கு இரண்டாவது வாரிசாக 1976ம் ஆண்டு பிறந்தவர் பவதாரிணி. இசையோடு பிறந்து வளர்ந்து இசையே உயிர் மூச்சாய் வாழ்ந்து வந்த பவதாரிணி, புற்றுநோய் காரணமாக நேற்று (ஜனவரி 25) காலமானார். அவரின் இறப்பு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


 



மிகவும் அமைதியான சாந்தமான ஒரு கலைஞர். தன்னை என்றுமே ஒரு செலிபிரிட்டி போல கட்டிக் கொண்டதே கிடையாது. பெண் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்காத ஒரு காலகட்டத்திலேயே 'பாரதி' படத்தில் இடம்பெற்ற 'மயில் போல பொண்ணு ஒன்னு...' என்ற பாடலை பாடி  தேசிய விருதை கைப்பற்றியவர். 


குடும்பம் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டு இருந்த பவதாரிணியின் தந்தைக்கு அடுத்த இடத்தில் இருந்து பாதுகாத்தவர் அவரின் அண்ணன் கார்த்திக் ராஜா. காலையில் தங்கையுடன் கிளம்பினால் இரவு வீடு வரும் வரை பாதுகாப்பாக தங்கையை பார்த்து கொண்ட பாசமான ஒரு அண்ணன். அதே போல தம்பி யுவனுடன் அதிக நேரம் செலவு செய்வாராம் பவதாரிணி. இருவரும் ஒருவருக்கொருவர் இணைந்தே தான் இருப்பார்களாம். வீட்டின் ஒரே பெண் பிள்ளையாக பிறந்து இன்று அவரை இழந்து வாடும் அந்த குடும்பத்திற்கு அது ஒரு பெரிய இழப்பு. 


 



ஒரு பாடகியாக, இசையமைப்பாளராக மக்களின் மனங்களில் நீங்காத ஒரு இடத்தை பிடித்த பவதாரிணியின் சிறு வயது பிளாஷ் பேக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அண்ணன் கார்த்திக் ராஜா, தம்பி யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அம்மா அப்பாவுடன் களங்கமில்லாமல் சிரிக்கும் பாவதாரிணியின் புகைப்படங்கள் அனைவைரையும் கலகங்கடிக்க செய்கிறது. 


 



இசைஞானி இளையராஜா ஆரம்ப காலகட்டத்தில் கவியரசர் கண்ணதாசன் வீட்டில் குடியிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. 


அப்பா இளையராஜா தன்னுடைய 80 வயதில் இன்னும் சுறுசுறுப்பாக இயக்கி வருவதுடன் இசை கச்சேரிகளை நடத்தி வரும் நிலையில் 47 வயதிலேயே இந்த உலகை விட்டு இசையோடு இசையாக காற்று கரைந்து போன பவதாரிணி அவரின் பாடல்கள் மூலம் இசை மூலமும் மக்களின் காதுகளில் ஒலித்து கொண்டே இருப்பார்.