தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக பட்டையை கிளப்பி வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், ஈஷா கோபிகர் உள்ளிட்டோரின் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான இப்படத்தை ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருந்தன. ஏலியன் ஜானரில் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ம் தேதி வெளியானது. 


 



வரவேற்பை பெற்ற அயலான் :


ஹாலிவுட் சினிமாவுக்கு நிகரான வி.எப்.எக்ஸ் காட்சிகள் அயலான் படத்தில் இடம்பெற்றது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியாக அமைந்த அயலான் திரைப்படம், ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிகப்படியான ஓப்பனிங் பெற்ற படம் இது தான் எனக் கூறப்படுகிறது. 


 



ரஜினியின் பாராட்டு :


சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படம் இன்று முதல் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இந்நிலையில் தெலுங்கு ஊடகம் ஒன்றின் நேர்காணலில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் பேசுகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'அயலான்' படத்தை பார்த்து விட்டு தன்னை பாராட்டியது பற்றி நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்.


"எப்படி இப்படி வெரைட்டியான படங்களில் நடிக்கிறீர்கள். மக்களுக்கு வித்தியாசமான படங்களை கொடுக்க வேண்டும் என்ற உங்களின் எண்ணம் எனக்கு பிடித்திருக்கிறது. இப்போதிலிருந்து நீங்கள் எனக்கு ஒரு முன்னோடி" என சிவகார்த்திகேயனை நடிகர் ரஜினிகாந்த் போன் செய்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.


அதற்கு "உங்களுடைய 2.O படம் தான் என்னை இது போன்ற ஒரு படத்தில் நடிக்க வைக்க உந்துதலாக இருந்தது” எனக் கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். மிகவும் மதிப்பும் மரியாதை வைத்திருக்கும் நடிகர் ஒருவர் தன்னை பாராட்டியது மிகுந்த உற்சாகத்தை கொடுத்ததாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 


 



அடுத்தடுத்த ப்ராஜெக்ட்ஸ் :


அயலான் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி இணைந்து SK21 படத்தில் நடித்து வருகிறார்கள். அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் 'கொட்டுகாளி' படத்தை தயாரித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இப்படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி வருகிறார். ஒரு நடிகராக சிறப்பான படங்களை தேர்ந்து எடுத்து நடித்து வருவதுடன் ஒரு தயாரிப்பாளராகவும் பல நல்ல திரைக்கதைகளை தயாரித்து வருகிறார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.