பாரதிராஜா இயக்கிய ‘முதல் மரியாதை’ திரைப்படம் வெளியாகி 38 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா கிராமியக் கதையாடல்களை சினிமாவில் கொண்டு வந்ததில் மிக முக்கியமானவர். முதல் மரியாதையின் ஒரு சின்ன ரீவைண்ட்!
கதைக் களஞ்சியம்
இந்திய நிலம் கிராமங்களால் உருவானது. இந்தக் கிராமங்களுக்கு உள்ளிருந்துதான் உலகத் தரம் வாய்ந்த கதைகளை இயக்கியிருக்கிறார்கள் பல இயக்குநர்கள். அதே நேரத்தில் சினிமாவில் ஒரு பக்கம் நகர வாழ்க்கை சித்தரிப்புகள் அதிகரித்து வரத்தொடங்கியிருந்தன. நகரங்களை கிராமங்களுக்கு எதிராகக் காட்டும் கதையாடல்கள் அதிகரித்து வந்தன. சினிமாவில் மட்டும் இல்லை, எந்த ஒரு கலையும் அதன் கதையாடல் முறைகளை வடிவங்களை அதன் பூர்வீக நிலங்களில் இருந்தே பெறுகிறது.
உதாரணமாக இன்று ஒரு படத்தின் திரைக்கதை மூன்று பாகங்களாக பிரிக்கப்படுகிறது. கதையின் தொடக்கம் , மையப் பிரச்னை மற்றும் கடைசியாக தீர்வு. ஒரு படத்தின் திரைக்கதை இந்த மூன்று பாகங்களாக பிரிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த தியரிகளைப் பற்றிய எந்தவித அறிதலும் இல்லாமலேயே நமது கிராமங்களில் வாய்மொழியாக சொல்லப்பட்டு வந்த கதைகள் இந்த அம்சங்களைக் கொண்டிருந்தன. இந்த அம்சத்தை தனது கதைகள் வழியாக குறிப்பாக முதல் மரியாதை திரைப்படத்தின் வழியாகக் காட்டியவர் பாரதிராஜா.
படம் பிடிக்காதவர்கள்
மக்கள் அனைவரும் கொண்டாடிய முதல் மரியாதை பிடிக்காத இரண்டு நபர்கள் யார் தெரியுமா? இந்தப் படத்தைப் பார்த்த இளையராஜா ஒருவர். படம் சற்று பழமையான கதையாக இருப்பதாகவும், தனக்கு படம் பிடிக்கவில்லை என்றும் பாரதிராஜாவிடம் கூறினாராம். இருந்தாலும் படத்திற்கு இசையமைக்க சம்மதித்தார் இளையராஜா. இதேபோன்ற கருத்தைத் தெரிவித்த மற்றொரு நபர் பாடலாசிரியர் வைரமுத்து.
இதுதான் இன்ஸ்பிரேஷன்
முதல் மரியாதை படத்தை எடுப்பதற்கு தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இரண்டு விஷயங்கள் இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார் பாரதிராஜா. ஒன்று தான் பார்த்த ஏதோ ஒரு ஆங்கிலப் படம். அந்தப் படத்தில் ஒரு இளமையான பெண் வயது முதிர்ந்த ஒரு ஓவியனைப் பார்த்து ஈர்க்கப்படுகிறாள். இந்தப் படம் தன்னை மிகவும் பாதித்ததாகத் தெரிவித்துள்ளார் பாரதிராஜா.
மற்றொரு இன்ஸ்பிரேஷன் எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய ‘சமூகம் என்பது நாலு பேர்’ என்கிற கதை. ஒரு ஊருக்கு புதிதாக வந்த ஆசிரியை தனது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லாத கிராம நிர்வாகி ஒருவரைக் காதலிப்பதை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை. இந்தக் கதையில் சித்தரிக்கப்பட்ட பெயரிடப்படாத இந்த உறவுகள் தன்னை ஈர்த்ததாக பாரதிராஜா தெரிவித்துள்ளார்.