பாரதி கண்ணம்மா சீசன் 1 சீரியலில் நடித்த பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த ஓராண்டாகவே தமிழ் சினிமாவின் பிரபலங்கள் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் மரணமடைந்து வருவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் மறைந்த நடிகர்கள் மயில்சாமி, மனோபாலா ஆகியோரின் மறைவை இன்றளவும் பலராலும் நம்ப முடியவில்லை. இப்படியான நிலை ரஜினி, கமலின் படங்களில் நடித்த நடிகை ஒருவர் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜயலட்சுமி. தொடர்ந்து நடிகர்கள் கமல், ரஜினியின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சீரியலில் நடிக்க தொடங்கிய அவர், சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா, போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். 


இதில் பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் சீசனில் கண்ணம்மாவை கொடுமைப்படுத்தும் கேரக்டரில் விஜய லட்சுமி நடித்திருந்தார். அதன்பின் தன் கேரக்டருக்கான காட்சிகள் இல்லை என்பதால் இந்த சீரியலில் இருந்து விலகியிருந்தார்.  சில மாதங்களுக்கு முன் தான் நிறைவடைந்த பாரதி கண்ணம்மாவின் இரண்டாவது சீசனுக்கான எபிசோட்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. 


இதனிடையே 70 வயதான விஜயலட்சுமி, நேற்று மரணமடைந்தார், தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக அவரது மகள் கிரண்மயில் தெரிவித்துள்ளார். பாரதி கண்ணம்மாவுக்குப் பிறகு தொடர்ந்து சீரியல் வாய்ப்புகள் வந்த நிலையில், உடல்நலப் பிரச்சினையால் நடிக்காமல் இருந்து வந்தார்.  விஜயலட்சுமி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்ததாகவும், சில நாட்களுக்கு முன்  பாத்ரூமில் இருந்து வழுக்கி விழுந்து தலையில் பலமாக அடிபட்டதாகவும் கூறப்பட்டது. சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் வீடு திரும்பிய நிலையில் விஜய லட்சுமி உயிரிழந்துள்ளார். 


சின்னத்திரை, பெரிய திரை சார்ந்த பிரபலங்கள் நேரில் சென்று விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்றே அவருக்கு இறுதிச் சடங்குகளும் நடைபெற்று முடிந்தது. வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும் விஜி எப்போதும் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர் என பிரபலங்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஒரு பேட்டியில், தனக்கு சாகும் வரை நடிக்க வேண்டும் என்பது ஆசை என விஜயலட்சுமி தெரிவித்திருந்தார் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு செய்தி கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


மேலும் படிக்க: Manobala: "வெளிய சொல்ல முடியாத சேட்டை.. அழாமல் பேசுவது ரொம்ப சிரமம்.." மனோபாலா நினைவால் உருகிய மன்சூர், டெல்லி கணேஷ்..!