22 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். இப்போது வீட்டுக்கு வந்து உடல் நிலை தேறி வருகிறேன். பழைய சக்தியோடு, உற்சாகத்தோடு உங்கள் அனைவரையும் மீண்டும் மேடையில் சந்திக்கும் நாளை எதிர்நோக்கியுள்ளேன் என்று பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி, பொங்கல் என பண்டிகை வந்துவிட்டால் புத்தாடை, பட்டாசுக்கு நிகராக பட்டிமன்றத்துக்கு இன்றளவும் எதிர்பார்ப்பு உள்ளது. அதுவும் பாரதி பாஸ்கர் போன்ற பேச்சாளர்கள் இருந்தால் அந்தப் பட்டிமன்றத்தின் சிறப்பை சொல்லவா வேண்டும். அழுத்தமான, அழகான உச்சரிப்பு சங்கப் பாடல்கள் தொடங்கி தேவைப்பட்டால் தற்கால சினிமாப் பாடல்களை வரை கோட் செய்து அவர் பேசும் விதம், நடுவர்களைத் தூண்டி விட்டு சாதகத் தீர்ப்பைக் கோரும் தொனி என எல்லாமே சரவெடி தான் பாரதி பாஸ்கரைப் பொருத்தவரையில். ஆனால் அண்மையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி வந்தவுடனேயே பலரும் வருத்தத்தை வெளிப்படுத்தினர். அவர் உடல்நலன் பெற வேண்டி பிரார்த்தனைகளைக் கொட்டினர். எல்லோரின் பிரார்த்தனையும் வீண் போகவில்லை. இதோ அவர் தேறி வந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடுயூப் பக்கத்தில் 9 நிமிடங்கள் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளர்.
அவரின் பேச்சு:
22 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். இப்போது வீட்டுக்கு வந்து உடல் நிலை தேறி வருகிறேன். பழைய சக்தியோடு, உற்சாகத்தோடு உங்கள் அனைவரையும் மீண்டும் மேடையில் சந்திக்கும் நாளை எதிர்நோக்கியுள்ளேன். எல்லோரையும் சந்திக்க இன்னும் கொஞ்சம் நாளாகலாம்.
சொல்லுக் கடங்காவே-பராசக்தி
சூரத் தனங்கலெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பராசக்தி
வாழியென் றேதுதிப்போம்
என்ற பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி பேசத் தொடங்கிய அவர் தனது சொல்லிலும், உடலிலும், மனதிலும், ஆன்மாவிலும் சக்தி மீண்டும் பிறந்திட நான் பிரார்த்தனை செய்கிறேன். மதங்கள் கடந்து உலக நாடுகளின் எல்லைகள் கடந்து எனக்காக நிறைய பிரார்த்தனை செய்தனர். குடும்பம் குடும்பமாக பிரார்த்தனை செய்துள்ளனர்.
நான் உங்களுக்காக பணம் காசு செலவழித்தது இல்லை. ஆனால், நான் பேசிய தமிழ் தான் உங்களை என்னுடன் இணைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி எத்தனையோ பெரியோர் என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் நன்றி. என்னை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த போது ஏதோ தலையில் தட்டியது போல் இருந்தது. ஆனால் ஆனியுரிஸம் ஏற்பட்டுள்ளது. எனது கணவர்தான் என்னைக் கூட்டிச் சென்றார். அவர் தான் எனக்காக இதைச் செய்தார். கணவர், குடும்பம், குழந்தைகள், சகோதரிகள், பட்டிமன்ற பேச்சாளர்கள், தகப்பனாருக்கு இணையான ஏஎம்ஆர், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன், இலங்கை ஜெயராஜ் ஐயா, நம்பி நாராயணன், மோகன் சி லாசரஸ், உலகமெங்கும் உள்ள ஈழத் தமிழர்கள், எனது அலுவலகத்தினர் இன்னும் பெரிய பட்டியல் உள்ளது. பேச்சாளர் சுகி சிவம் ஐயாவுக்கு நன்றி.
எல்லோரின் பெயரும் சொல்ல முடியாத அளவுக்கு அத்தனை பெயர்கள் உள்ளனர். என்னை சந்தித்திராத எத்தனையோ பேர் கண்னீர் மல்க பிரார்த்தனை செய்துள்ளீர்கள். உங்கள் அனைவரின் அன்பு என்னை திக்குமுக்காட செய்துவிட்டது.
கடவுள் நமக்கு இரண்டாவது வாய்ப்பைக் கொடுக்கும் போது வாழ்க்கை அவ்வளவு அழகாக இருக்கிறது. வாழ்க்கை அவ்வளவு அழகாகத் தெரிகிறது. காக்கா குருவி ஓசை கூட மகிழ்ச்சி தருகிறது. என் குடும்பத்தினரின் கவனிப்பு என்னை நெகிழச் செய்கிறது.
என் வார்த்தைகளில் பழைய சக்தியுடன் நான் மேடைக்கு வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. கோயிகள், மசூதிகள், தேவாலயங்களில் எனக்காகப் பிரார்த்தனை நடந்துள்ளது. கோயில்களில் நடந்த பூஜைகளின் பிரசாதப் பார்சல்கள் குட்டி மலைபோல் குவிந்திருக்கிறது.
கடவுள் இதன் மூலம் எனக்கு ஏதோ நோக்கம் வைத்திருக்கிறார். இந்த இரண்டாவது இன்னிங்க்ஸில் என் பேச்சின், எழுத்தின் மூலம் ஏதோ செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.
மீண்டும் சந்திப்போம். நன்றி வணக்கம் என்று கூறியுள்ளார்.