இந்திய சினிமாவில் எத்தனையோ டான் படங்கள் வந்திருக்கின்றன, வந்துகொண்டிருக்கின்றன, வரவும் இருக்கின்றன. ஆனால், அத்தனை படங்களுக்குள்ளும் மணிரத்னம் - கமல் - பி.சி. ஸ்ரீராம் - இளையராஜா கூட்டணியில் வெளியான நாயகனின் தாக்கம் நிலைத்து நிற்கும்.
வாழ்க்கை திடீரென ஒருவனை எந்த நிலைக்கு வேண்டுமானாலும் தள்ளும். அப்படி வேலுவை வேலுபாயாக மாற்றி, வேலு நாயக்கராக சாம்ராஜ்ஜியத்தை வாழ்க்கை உருவாக்கியிருக்கும். அந்த சாம்ராஜ்ஜியம் நல்லது செய்கிறதா இல்லை கெட்டது செய்கிறதா என்பதைவிட அது எளிய மக்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதுதான் முக்கியம்.
வேலு நாயக்கரின் சாம்ராஜ்ஜியம் அரசாங்கத்தின் பார்வையில் கெட்டதாக தெரிந்தாலும் (கெட்டது என்பதைவிட ஜீரணிக்க முடியாதது) எளிய மக்களுக்கு அப்படிப்பட்டதுதான் தேவையாக இருந்தது. எது தேவையோ அதுதானே தர்மம்தான். அந்தப் பாதையில் பயணித்தவர் வேலு நாயக்கர்.
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியவர்களில் மணிரத்னத்தின் பங்கு தவிர்க்கவே முடியாது. பாலுமகேந்திரா, மகேந்திரன் உள்ளிட்டோர் மௌனங்களை மொழியாக்கியவர்கள். மணிரத்னம் அந்த மௌன மொழியில் ஒன்றிரண்டு வார்த்தைகளை மட்டுமே சேர்த்து அந்த மௌன மொழியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றவர்.
நாயகன் ஒரு நாயக பிம்பம் உள்ள சினிமா. ஆனால், அப்படத்தில் எந்தவித சத்தமோ, ஆர்ப்பாட்டமோ இருக்காது. புயலிலே ஒரு தோணி போல் மணிரத்னம் நாயகனை அழைத்து சென்றிருப்பார். அவருக்கு, கமல், பி.சி. ஸ்ரீராம், இளையராஜா பலமாக உதவியிருப்பார்கள்.
மணிரத்னத்தை ஃப்ரெஞ்ச் பியர்ட் வைத்த வள்ளுவர் என்று சொல்லலாம். ஒன்றரை அடியில் வள்ளுவர் எப்படி பல விஷயங்களை சொல்லி சென்றிருக்கிறாரோ அதுபோல் மணி சில வரிகளில் மாஸ் மேஜிக்கை நிகழ்த்திவிடுவார்.
தன்னை போட்டு துவைத்த காவல் துறை அதிகாரியிடம், “நான் அடிச்சா நீ செத்துடுவ” என்று வேலு பேசும் வசனம் மாஸ் பேக்கேஜ். குறிப்பாக செல்வாவிடமும் (ஜனகராஜ்), வேலுநாயக்கரிடமும் அவரது மகள் வாக்குவாதம் செய்யும் காட்சியில் “அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்” என பேசப்படும் வசனம் ஒட்டுமொத்த எளிய மக்களுக்கான பிரதிபலிப்பாகவே இருந்தது.
வேலுநாயக்கர் எப்படி சட்டத்தை கையில் எடுக்கலாம் அது தவறில்லையா என்று கேள்வி எழலாம். அந்தக் கேள்வி ஒருவகையில் அபத்தமானது. சட்டமும், அதிகாரமும் எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்டதே தவிர மக்களை படுத்துவதற்கு இல்லை. அதிகாரத்தைக் கொண்டும், சட்டத்தைக் கொண்டும் மக்கள் ஒடுக்கப்படும்போதெல்லாம் வேலுநாயக்கர்கள் உருவாகத்தான் செய்வார்கள்.
நாயக்கர் நல்லவரா கெட்டவரா என்று ஆராய்வதைவிட நாயக்கரின் தேவை தாராவிக்கு என்னவாக இருந்தது என்பதை கவனிக்க வேண்டும்.
படத்தை நகர்த்தியதில் மணிரத்னத்தின் பங்கு இப்படி மாஸாக இருந்தது என்றால், இசையில் இளையராஜா செய்தது மேஜிக்கின் உச்சம். ஒரு டான் உருவாவதிலிருந்து அந்த டான் வீழும்வரை என ராஜா அமைத்த இசை நிச்சயம் நாயகனுக்கான ஈர்ப்பு விசை.
ஒரு டானுக்கு தென்பாண்டி சீமையிலே ட்யூனை வைப்பதெல்லாம் யாராலும் யோசிக்க முடியாதது. அப்படி யோசித்தாலும் அதை பயன்படுத்த தயங்குவார்கள். ஆனால் ராஜா செய்வார். அவருக்கு தன் இசை மீது பெரும் கர்வமும், நம்பிக்கையும் இருக்கிறது. இளையராஜாவுக்கு நாயகன் 400ஆவது படமும்கூட.
படத்தின் டைட்டில் கார்டில் இளையராஜா (400ஆவது படம்) என்று வரும்போது பி.சி. ஸ்ரீராம் கேமரா ஒருமேஜிக்கை நிகழ்த்தியிருக்கும். இப்போது பார்த்தாலும் அவ்வளவு ஃப்ரெஷ்ஷாக இருக்கும் காட்சியமைப்பு அது.
அதேபோல், சரண்யா - கமலுக்கு இடையேயான காதல் காட்சிகளில் இருவரும் அவ்வளவு இயல்பான அழகோடு இருக்க, அந்த இயல்பான அழகை பி.சி. அடுத்தக்கட்டத்திற்கு தனது கேமராவால் அழைத்து சென்றிருப்பார்.
க்ளீன் ஷேவ் முகத்தில் வாழ்க்கையில் ஒதுக்கப்பட்ட கோவத்தை அளவோடு வைத்துக்கொண்டது, மிடுக்கான நடைகொண்டது, மகளுக்கும், மக்களுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு எந்தப் பக்கம் நகர்வது என திணறியது என்று கமலின் நடிப்பை பற்றி அவ்வளவு பேசலாம். தன்னை ஏன் இந்தியாவின் சிறந்த நடிகர் என அனைவரும் சொல்கிறார்கள் என்பதற்கான சாட்சியாக கமல் வாழ்ந்திருப்பார்.
இதுபோன்ற உழைப்பை படத்தில் பணியாற்றியவர்கள் கொட்டியதாலும், சில விதிகளை உடைத்ததாலும்தான் அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை தேர்ந்தெடுத்த உலகின் சிறந்த 100 படங்களில் இந்தியாவிலிருந்து நாயகன் இடம்பெற்றது.
தமிழில் வந்த தலைவா, சமீபத்தில் மலையாளத்தில் வந்த மாலிக் என நாயகனின் தாக்கத்தை இந்திய சினிமாவிலிருந்து விலகவே விலகாது விலக்கவும் முடியாது. ஏனெனில் இப்படம்தான் இந்தியாவில் நிரந்தர நாயகன்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: கூட்டுறவு வங்கி மாநிலத் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு!
Ilangovan | எடப்பாடியின் தளபதி.. மாஸ்டர் மைண்ட்.. இபிஎஸ்.,யின் இதயம்... யார் இந்த இளங்கோவன்?