90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை தேவயானி. காதல் கோட்டை படத்தின் வெற்றிக்கு பிறகு உச்சத்துக்கு சென்ற தேவயானிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த அஜித், விஜய், கமல், முரளி, மம்மூட்டி, பிரஷாந்த், ராமராஜன், ஜெயராம், நெப்போலியன், பார்த்திபன், கார்த்திக், பிரபு என அனைத்து நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள தேவயானிக்கு சிறந்த ஆன் ஸ்கிரீன் ஜோடியாக இருந்தவர் நடிகர் சரத்குமார்.
தேவயானி - சரத்குமார் :
தேவயானி - சரத்குமார் ஜோடியாக சேர்ந்து சமஸ்தானம், தென்காசிபட்டணம், பாட்டாளி, ஒருவன், மூவேந்தர், சூர்யவம்சம் என பல படங்களில் நடித்துள்ளனர். அதிலும் விக்ரமன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான சூர்யவம்சம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றி அவரை தமிழ் சினிமாவில் டாப் நடிகை அந்தஸ்தை பெற்று கொடுத்தது. தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சரத்குமார் - தேவயானி ஜோடி இணையுள்ளது.
சித்தார்த் 40 :
8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களின் மூலம் இயக்குநராக பிரபலமான ஸ்ரீ கணேஷ் தற்போது நடிகர் சித்தார்த்தை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார். ஷாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் இது சித்தார்த் நடிக்கும் 40வது திரைப்படமாகும். இதில் மீதா ரகுநாத் , மற்றும் கன்னட நடிகை சைத்ரா அசார் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் மூலம் சரத்குமார் மற்றும் தேவயானி இணைந்து நடிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.
சின்னத்திரையில் தேவயானி:
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகை தேவயானி. சன் டிவியில் ஒளிபரப்பான 'கோலங்கள்' சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற தேவயானி அதை தொடர்ந்து முத்தாரம், ராசாத்தி, புதுப்புது அர்த்தங்கள், செம்பருத்தி உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோக்களின் நடுவராக இருந்துள்ளார்.
மீண்டும் இணையும் கம்போ :
சித்தார்த் 40 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் தேவயானிக்கு நல்ல ஒரு கம் பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூப்பர் டூப்பர் ஜோடிகளான சரத்குமார் - தேவயானி காம்போவை 22 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் பார்க்க போவதை எண்ணி அவர்களின் ரசிகர்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளனர்.