ராயன்
தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியிருக்கும் ராயன் படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை இந்த டிரைலர் ரிவியூவில் பார்க்கலாம்.
ராயன் டிரைலர் ரிவியு (Raayan Trailer Review)
ராயன் படம் வடசென்னையும் அதை சார்ந்த கதாபாத்திரங்களை மையப்படுத்திய கதை என்பது நாம் முன்பே அறிந்த தகவல். தனுஷ் , சந்தீப் கிஷன் , காலிதாஸ் ஜெயராம் ஆகிய மூவரும் அண்ணன் தம்பிகள். இவர்களின் ஒரே சகோதரி துஷாரா விஜயன்.
டிரைலரின் தொடக்கத்தில் செல்வராகவன் தனுஷிடம் காட்டில் பலமான மிருகம் சிங்கம். ஆனால் ஆபத்தான மிருகம் ஓநாய் என்கிறார். ஓநாய் என்று செல்வராகவன் குறிப்பிடுவது முக்கிய வில்லனாக நடித்திருக்கும் எஸ். ஜே சூர்யாவை என்று எடுத்துக் கொள்ளலாம். சாமானியனாக வளரும் ராயன் தனது தங்கைக்கு ஒரு ஆபத்து என்கிற போது அடங்காத அசுரன் அவதாரம் எடுப்பது தான் படத்தின் மையக் கதையாக இருக்கலாம். ராயனின் தங்கையாக இருக்கும் துஷாராவை வில்லனான எஸ்.ஜே சூர்யா கொல்ல நினைப்பது ஏன் என்பது படம் வெளியாகும்போது தான் தெரியும். ஆனால் முழுக்க முழுக்க ரத்தம் சிதறும் ஆக்ஷன் காட்சிகள் சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்ட படமாக ராயன் படம் இருக்கும் என்பதை இந்த டிரைலரில் பார்க்க முடிகிறது.
ரஹ்மான் இசை
ஏ ஆர் ரஹ்மானின் பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை ரசிகர்களை இப்படத்தில் அதிகம் கவரும் என எதிர்பார்க்கலாம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் புதுப்பேட்டை படத்தைப் போல் இருளில் எடுக்கப் பட்டிருப்பது கவனிக்கத் தக்க ஒரு அம்சம். எல்லாவற்றுக்கும் மேல் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா படத்தில் முக்கிய வில்லனாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருந்தாலும் எமோஷன் சரியான முறையில் கையாளப் பட்டிருக்கும் பட்சத்தில் ராயன் படம் மிகப்பெரிய வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை.