மத்திய பட்ஜெட் 2024 க்கான பட்ஜெட் தயாரிப்பு செயல்முறையின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா விழா, இன்று மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நார்த் பிளாக்கில் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்பின் "லாக்-இன்" செயல்முறை தொடங்கும் முன் அல்வா விழா நடத்தப்படுவது வழக்கம். அதாவது ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கலாவதற்கு 9 அல்லது 10 நாட்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சகத்தால் அல்வா விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று அல்வா விழா நடைபெற்றது.
பட்ஜெட் தொடர்பான விஷயங்கள், தகவல்கள் வெளியே செல்லா வண்ணம் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும்வகையில், பட்ஜெட்டை தயாரித்த அதிகாரிகளும் நாடாளுமன்றத்திலேயே பூட்டி வைக்கப்படுவார்கள். அவர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களை கூட பட்ஜெட் தாக்கல் வரை பார்க்க அனுமதி கிடையாது.
இந்த நிலையில்தான் அல்வா கிண்டும் விழா நடைபெற்றுள்ளது. இதில் அல்வா கிண்டி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுக்கு அல்வா வழங்கினார். மேலும் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
2024- 2025ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் வரும் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யபடுகிறது. இதற்கான நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜூலை 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. பிரதமர் மோடி தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளநிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செயய்ப்பட உள்ளது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
எந்த மாதிரியான புதுபுது அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 6 வது முறையாக முழு நேர பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். வரும் ஜூலை 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.