Latha Rajinikanth: மோசடி வழக்கில் சிக்கிய லதா ரஜினிகாந்திற்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

 

ரஜினி நடித்த கோச்சடையான் படம் 2014ம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்த படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார். படத்தை மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் முரளி தயாரித்திருந்தார். படத்தை தயாரிப்பதற்காக முரளிக்கு ஆட் பீரோ நிறுவனம் சார்பில் ரூ.6.2 கோடி கடன் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

 

ஆனால், படம் ரிலீசான பிறகு எதிர்பார்த்த வசூலை பெறாததால் கோச்சடையான் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் முரளி பெற்ற ரூ.6.2 கோடி பணத்தை திரும்ப செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக படத்திற்கு முரளி கடன் வாங்கும்போது போடப்பட்ட ஒப்பந்தத்தில், பணத்திற்கு உத்தரவாதம் அளித்து லதா ரஜினிகாந்த் கையெழுத்து போட்டுள்ளார். 

 

கோச்சடையான் படம் சௌந்தர்யா ரஜினிகாந்த் எடுத்ததாலும், படத்தில் ரஜினி நடித்ததாலும் லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் கையெடுத்து போட்டுள்ளார். ஆனால், படம் நஷ்டத்தை சந்தித்துள்ளதால், முரளி பெற்ற கடனை லதா ரஜினிகாந்த் கொடுக்க வேண்டும் என்று ஆட் பீரோ நிறுவனத்தின் தரப்பில் அபிர் சந்த் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பெங்களூரு நீதிமன்றத்தில் 2015ம் ஆண்டு தொடர்ந்த இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வருகிறது. 

 

புகாரின் அடிப்படையில் லதா ரஜினிகாந்த் மீது 196, 199, 420, 463 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட போது தன் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி லதா ரஜினிகாந்த் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மூன்று வழக்குகளை ரத்து செய்த நீதிமன்றம் 463 பிரிவில் உள்ள வழக்கை மட்டும் விசாரிக்க உத்தரவிட்டது. 

 

அந்த வழக்கையும் ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணையில், லதா ரஜினிகாந்தின் விசாரணையை பெங்களூரு நீதிமன்றமே மேற்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனால், பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தீவிரமடைந்தது. பெங்களூரு கூடுதல் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் லதா ரஜினிகாந்த் ஆஜராக வேண்டும் என்றும் இல்லை என்றால் பிரிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்தது. 

 

அதன்படி, இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான லதா ரஜினிகாந்திற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. காரில் இருந்து இறங்கி நீதிமன்றத்திற்கு சென்ற லதா ரஜினிகாந்த் தலையில் முக்காடு அணிந்து சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.