இந்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக உள்ளது பெல் பாட்டம். 1980களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ரஞ்சித் எம்,திவாரி இயக்கியுள்ளார். இப்படத்தில் அக்‌ஷய்குமார், வாணிகபூர், ஹியூமா குரோசி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இப்படம் ஆகஸ்ட் 19ல் திரையரங்கில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் சமீபத்தில் பெல் பாட்டம் படத்தின் ட்ரைலரை படக்குழு டெல்லியில் வெளியிட்டது. ட்ரெய்லர் நல்ல வரவேறை பெற்ற நிலையில் அதில் அதிகம் ரசிகர்களை கவந்துள்ளார் லாரா தத்தா.  ஆனால் ட்ரைலரில் எங்கே லாரா தத்தா வருகிறார் என்றே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவர் தன் உருவத்தையே மாற்றியுள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியாகவே மாறிவிட்டார் லாரா. அவரது உருவத்தைக் கண்ட ரசிகர்கள் இது லாராவா? என வாயடைத்து போய்விட்டனர். தலைமுடி, முகம் என மிகப்பெரிய மெனக்கெடலுடன் தன் லுக்கையே மாற்றியுள்ளார் லாரா.




இது குறித்து பிங்க்வில்லாவுக்கு பேசிய லாரா, கடந்த வருடம் மேமாதம் பெல் பாட்டம் திரைப்படத்தில் நடிக்க வேண்டுமென அக்‌ஷய் அழைத்தார். நீங்கள் இந்திராகாந்தியாக நடிக்க வேண்டுமென தெரிவித்தார்.  என்னால் நம்பமுடியவில்லை. இந்திராகாந்திக்கும் எனக்கும் என்ன தொடர்பு? அவரை எப்படி என்னால் திரையில்  கொண்டுவரமுடியும்? இந்த கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேனே என சந்தேகமாக உள்ளது என அக்‌ஷயிடம் தெரிவித்தேன்.  தோற்றத்தை உருவாக்கிவிடலாம். மற்றபடி நடிப்பும், உடல் அசைவுகளுமே இந்திரா காந்தியை உங்களுக்குள் கொண்டுவந்துவிடும் என அக்‌ஷய் கூறினார். நான் அக்‌ஷய்க்கு தான் நன்றி சொல்வேன். நான் நடிப்பதற்கு முன்னதாகவே அவர் எனக்குள் இந்திராகாந்தியை பார்த்துவிட்டார். நான் இந்திராகாந்தியாக நடிப்பது பெரிய பொறுப்பு. அதற்கு நான் தயாராகிக்கொண்டே நடித்தேன் என்றார். 


மேக்கப் குறித்து பேசிய லாரா,  நான் இந்திராகாந்தியாக மாற அதிகம் உழைத்தவர் விக்ரம் குய்க்வாத். என் முகத்தை அவர் செயற்கையாக மாற்றினார். குறிப்பாக வயதான தோற்றத்தை கொண்டுவர சுருக்கங்கள் முகத்தில் கொண்டுவரப்பட்டது. இந்திராகாந்தியின் ஹேர்ஸ்டைல் அவருக்கான அடையாளம். நாங்கள் அதற்கும் நிறைய சிரமப்பட்டோம். லுக் டெஸ்ட் எடுத்து உருவாக்கினோம். நினைத்தது போலவே வந்தது.  அனைத்தும் முடிந்து என்னை நான் கண்ணாடியில் பார்த்தபோது அது நானாகவே இல்லை. என்னையே எனக்கு அடையாளம் தெரியவில்லை. 




ஒருநாளைக்கு 3 மணி நேரங்கள் மேக்கப்பிற்காக லாரா ஒதுக்கியுள்ளார். இதுப்பற்றி தெரிவித்துள்ள அவர், ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னதாகவே காலையில் 3 மணி நேரங்கள் செலவிட்டு இந்த மேக்கப்பை போட வேண்டும். மேக்கப்பை கலைக்கவே ஒரு மணி நேரம் ஆகும். இது ஒரு பெரிய வேலைதான். ஆனால் தகுதியானது தான். என்றார்.


படத்துக்காக இந்திராகாந்தியின் பழைய வீடியோக்களை லாராவிடம் காட்டிய இயக்குநர், இந்திராவின் நடை, கண் அசைவு, கை அசைவுகள் குறித்தெல்லாம் பழக வைத்துள்ளார். கூடுதல் தகவலாக தன் தந்தை குறித்து பேசிய லாரா, என் தந்தை ஒரு விமானி. இந்திராகாந்தியின் தனிப்பட்ட விமானத்தை இயக்கியவர்.  நான் சிறுவயது முதலே இந்திராகாந்தி குறித்து நிறைய கேள்விப்பட்டு வளர்ந்துள்ளேன். அதனால் இந்த கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமானது என்றார்.