டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் Vs வைல்ட் என்ற ரியாலிட்டி ஷோ உலகின் மிகப் பிரபலமான டிவி தொடர்களில் ஒன்று. ஏதாவது ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனது குழுவுடன் சிக்கி கொண்டு அங்கிருக்கும் அபாயங்களை சமாளித்து எப்படி மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு வருகிறார் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் அடிப்படை. அது பாலைவனமாக, அடர்ந்த காடாக, மலையாக, நீர் நிலையாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இது போன்ற நிகழ்ச்சிகளில் சில சமயங்களில் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். அது போன்ற நேரங்களில் அதிக அளவிலான சாகசங்கள் நிறைந்த ஒரு சூழல் இருக்காது.



பிரதமர் நரேந்திர மோடியுடன் பியர் கிரில்ஸ்


 


2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக அவர் பல முறை இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் மிக பெரிய பிரபலங்களான கேட் வின்ஸ்லெட், ரோஜர் பெடரர், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி, அக்ஷய் குமார், ரஜினிகாந்த், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் தங்களை பற்றியும் பலதரப்பட்ட விஷயங்களின் அவர்களின் பார்வை கருத்து குறித்தும் பகிர்ந்து கொள்வார்கள். கடந்த நிகழ்ச்சியில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பியர் கிரில்ஸ் கலந்து கொண்ட போது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகிய இரண்டு நட்சத்திர பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து உறுதியாக சொல்ல முடியாது என்றாலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்து இருந்தார்.


இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை ப்ரியங்கா சோப்ரா இருவருமே உலகளவில் மிகவும் விரும்பப்படும் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களின் இந்த வாழ்க்கை பயணத்தை பற்றியும் சாதனைகளை பற்றியும் தெரிந்து கொள்வது அவர்களின் ரசிகர்களுக்கு உற்சாகமானதாக, உத்வேகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.