பார்பி படத்தில் பார்பியாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்த ஆஸ்திரேலிய நடிகை மார்காட் ராபீ, தன் மாற்றுத் திறனாளி ரசிகர் ஒருவரிடம் சைகை மொழியில் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மார்காட் ராபீ
ஹாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மார்காட் ராபீ. மார்ட்டில் ஸ்கார்செஸீ இயக்கிய ‘ஒல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’, டராண்டினோ இயக்கிய ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்.
தற்போது கிரெட்டா கெர்விக் இயக்கியிருக்கும் பார்பி திரைப்படத்தில் பார்பியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் இந்திய ரசிகர்களுக்கு மிக ஆதர்சமான நடிகையாக மாறியிருக்கிறார் மார்காட் ராபீ.
தற்போது பொது இடம் ஒன்றில் மார்காட் ராபீயின் ரசிகர் ஒருவர் அவரது ஆட்டோகிராஃப் பெறுவதற்காக அவரை அணுகியுள்ளார். கேட்கும் திறன் அற்ற அந்த மாற்றுத் திறனாளி ரசிகரிடம் மிக சரளமாக சைகை மொழியில் மார்காட் ராபீ உரையாடியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
பார்பி
கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங், அமெரிக்கா ஃபெரெரா, இசா ரே, கேட் மெக்கின்னன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் பார்பி.
உலக அளவில் பிரபலமான பார்பி பொம்மைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் பார்பி. பல்வேறு அனிமேஷன் படங்களுக்குப் பிறகு இறுதியாக இப்படம் மனிதர்கள் நடிப்பில் உருவாகி உள்ளது. இப்படம் பார்பிக்களின் உலகுக்கும் உண்மையான உலகுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை பிரதிபலிக்கிறது. பார்பிக்களின் உலகில் பார்பிக்களான பெண்கள் ஆட்சி செய்ய, உண்மையான உலகில், ஆண்கள் அடக்குமுறை செய்கிறார்கள் என்பதை இத்திரைப்படம் எடுத்துக் கூறுகிறது.
கிரெட்டா கெர்விக்
ஹாலிவுட்டில் பெண்களின் உணர்வுகளை மிக அழகாக பதிவு செய்யும் இயக்குநர்களில் முக்கியமானவர் கிரெட்டா கெர்விக். இவர் இயக்கிய பிரான்சைஸ் ஹா இன்றுவரை ஆண் பெண் இருதரப்பினராலும் சிலாகிக்கப்படும் திரைப்படம். மேலும் லுயி மே ஆல்காட் எழுதிய ‘லிட்டில் வுமன்’ என்கிற நாவலை தனது பார்வையில் புதிய கண்ணோட்டத்தில் இயக்கியிருப்பார் க்ரெட்டா. கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்கார்லெட் ஜொஹான்சன் நடித்த ‘மேரேஜ் ஸ்டோரி’ திரைப்படத்தை இயக்கியவர் க்ரெட்டா என்பது குறிப்பிடத்தக்கது.