நான் நடிக்க வந்ததில் என் அம்மாவுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை என்று கூறியுள்ளார் நடிகை பானுப்ரியாவின் தங்கை சாந்திப்ரியா.
அம்பிகா - ராதா, ராதிகா - நிரோஷா வரிசையில் 1980-களில் கலக்கிய நட்சத்திர சகோதரிகளில் பானுப்ரியா – சாந்திப்ரியாவும் பிரபலமானவர்கள். பானுப்ரியாவுக்கு அறிமுகமே தேவையில்லை. அவரின் தங்கை சாந்திப்ரியா, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் அறிமுகமாகி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தாண்டி பாலிவுட்டிலும் பெயர் எடுத்தவர். மும்பையில் வசிக்கும் சாந்திப்ரியா, சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது ஒரு யூடியூப் சேனலுக்கு சுவாரஸ்ய பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியில் இருந்து..
எங்கள் வீட்டில் என் அக்கா தான் முதலில் நடிக்க வந்தார். இருவருமே நன்றாக நடனமாடுவோம். முறைப்படி நாங்கள் பரதம் கற்றுக்கொண்டோம். அக்காவை ஒரு பரதநாட்டிய நிகழ்வில் பார்த்த இயக்குநர் பாரதிராஜா அவரை சினிமாவுக்குக் கொண்டுவந்தார். அக்காவோட உண்மையான பெயர் பானு. அவர்தான் அந்தப் பெயரின் பின்னால் ப்ரியா என்பதைச் சேர்த்து பானுப்ரியா என்று மாற்றினார். நான் 9வது படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எங்க ஊரு பாட்டுக்காரன் பட வாய்ப்பு வந்தது. கங்கை அமரன் சார் இயக்கம். அவர் என் அம்மாவிடம் வந்து என்னை ஹீரோயினாக நடிக்கவைக்க அனுமதி கேட்டார். அம்மாவுக்கு சுத்தமாக விருப்பமில்லை. ஏற்கனவே அக்கா நடிகையாக இருக்கிறார். அதனால் அவர் மட்டும் நடிக்கட்டும் நீ படி என்றார். ஆனால் நான் நடிக்கச் செல்வேன் என்று பிடிவாதம் காட்டினேன். அதனால் அவர் ரொம்பவே மனம் வேதனைப்பட்டார். என் பிடிவாதத்திற்காக சம்மதம் சொன்னார். நான் அம்மாவிடம் படிப்பைக் கைவிடமாட்டேன் என்று உறுதி கூறினேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. 9வதுக்குப் பின் நான் படிக்கவே இல்லை.
நிஷாந்தி பெயர் எப்படி வந்தது?
எனது முதல் இயக்குநர் கங்கை அமரன் சார். அவர்தான் எனக்கு முதலில் நிஷாந்தி என்று பெயர் வைத்தார். அப்புறம் அதில் ஒரு னி சேர்த்து நிஷாந்தினி என்று ஆனது. அதன் பின்னர் தெலுங்கில் ரேகா என்ற பெயர் இருந்தது. மீண்டும் தமிழுக்கு வந்தபோது அம்மா சொன்னார் பெயரில் எதற்கு இத்தனை குழப்பம் பானுப்ரியா மாதிரி உன் பெயரின் பின்னால் ப்ரியா சேர்த்து சாந்தி ப்ரியா என்று ஆக்கிவிடு என்றார். அப்புறம் சாந்திப்ரியாவே நிலைத்துவிட்டது. ஆனால் இப்பவும் என்னைப் பார்க்கும் தமிழர்கள் செண்பகமே பாடல் எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலம் தான் அறிகிறார்கள். இல்லாவிடால் பானுப்ரியா தங்கை என்பார்கள்.
தமிழில் நான் ரகுவரன், பாண்டியராஜன், அர்ஜூன், ராம்கி போன்ற ஹீரோக்களுடன் நடித்திருக்கிறேன். தெலுங்கில் தாசரி நாராயணன் சார் இயக்கத்தில் நானும் அக்காவும் விஸ்வாமித்ரா என்ற படத்தில் நடித்தோம். அதைப்பார்த்தே எனக்கு இந்தியில் வாய்ப்பு வந்தது. அது அக்ஷய் குமாருக்கு முதல் படம். அதன் பின்னர் இந்தியிலும் ஒரு ரவுண்ட் வந்தேன். இப்போது நான் இந்தியில் நிறைய ஓடிடி தள சீரிஸ்களில் நடித்து வருகிறேன். 1992ல் நான் நடித்தது தான் தமிழில் கடைசி படம். அதன் பிறகு தெலுங்கு, இந்தி என்று என் ஏரியா மாறிவிட்டது.
இவ்வாறாக சாந்திப்ரியா விறுவிறுப்பாக பேசினார்.