சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த் , அதர்வா , ரேவதி உள்ளிட்ட பல முக்கிய மற்றும் முன்னணி நடிகர்களின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் ஆந்தாலஜி வெப் தொடர் ‘நவரசா’. இந்த வெப் தொடரை மணிரத்தினம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து தயாரித்துள்ளனர். மனிதனின் ஒன்பது குணங்களை வெளிப்படுத்தும் விதமாக , காதல், கோவம், நகைச்சுவை உள்ளிட்ட 9 குறும்படங்களின் தொகுப்பாக வெளியாகியுள்ளது நவரசா.


இந்த ஆந்தாலஜி தொடரை  கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், வஸந்த் சாய், கார்த்திக் சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன் பிரசாத் என 9 இயக்குநர்கள் இயக்கியிருந்தனர். மேலும் ஒவ்வொரு ரசத்திற்கும் ஏற்ற மாதிரியான இசைகளை வழங்க ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக் உள்ளிட்ட 9 இசையமைப்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். 


படம் இன்று வெளியான சூழலில் கடந்த சில நாட்களாகவே, படத்தின் புரமோஷன் வேலைகளை தடபுடலாக செய்தது நெட்பிளிக்ஸ். குறிப்பாக தினசரி நாளிதழில்  தினமும் முதல் பக்கம் ஒரு பக்க அளவு விளம்பரம் கொடுத்து வந்தது. 9 வகையான குறும்படங்களையும் குறிப்பிடும் விதமாக இது தினம் தோறும் வெளியானது. இந்நிலையில் இன்று வெளியான விளம்பரத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.




பயன் என்பதை மையப்படுத்தி உருவான இன்மைதான் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. பயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள தொகுப்பை ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். இதற்கு 'இன்மை' எனப் பெயரிடப்பட்டுள்ளது . இதில் சித்தார்த், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கான விளம்பரத்தில் குரான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனித புத்தகமாக கருத்தப்படும் குரானை படத்தின் விளம்பரத்திற்கு பயன்படுத்தியது தவறு என ட்விட்டரில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றன. 


இஸ்லாமிய மக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இன்மை படத்தின் விளம்பரம் நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ளது என ட்விட்டரில் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். இதனை அடுத்து #BanNetflix என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.