அஜித்தின் மைத்துனர் ரிச்சர்டை வைத்து படம் இயக்கியும் அஜித்தின் தீவிர ரசிகரான தன்னால் அவருடன் ஒரு ஃபோட்டோ எடுக்க முடியாத நிலை பற்றி இயக்குநர் மோகன் ஜி மனம் திறந்து பேசியுள்ளார்.


பகாசுரன் ரிலீஸ்


இயக்குநர் மோகன் ஜியின் நான்காவது படமாக, செல்வராகவன் நடித்துள்ள பகாசுரன் படம் நாளை (பிப்.17)  திரையரங்குகளில் வெளியாகிறது. ஒளிப்பதிவாளர் நட்டி நடராஜ், தேவதர்ஷினி, ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், ராம்ஸ், சரவணன் சுப்பையா எனப் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.


சாம்.சி.எஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆன்லைன் பாலியல் தொழில், மசாஜ் செண்டர் வேலை ஆகியவற்றை மையப்படுத்தியும், தினசரி செய்தியை அடிப்படையாகக் கொண்டும் இப்படத்தின் கதை அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சர்ச்சைக் கதைகள்


முன்னதாக பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இதுவரை இயக்கியுள்ள மோகன் ஜி அவரது கதைகளுக்காக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார். குறிப்பாக, பட்டியலின மக்களைக் குறித்து தவறாக சித்தரிக்கிறார், ஆதிக்க சாதி மனப்பான்மையை பிரதிபலிக்கிறார் என தொடர்ந்து மோகன் ஜி மீது இணையத்தில் கடும் விமர்சனங்கள் பலதரப்பட்ட நபர்களாலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மோகன் ஜியின் பதிவுகளும் தொடர்ந்து ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தன் மீதான இத்தகைய பார்வையை பகாசுரன் மாற்றும் என மோகன் ஜி ஏற்கெனவே நம்பிக்கை தெரிவித்திருந்தார்.


’அஜித் ரசிகர் ஆனா, ஃபோட்டோ எடுக்க முடியல...’


இந்நிலையில்,  தீவிர அஜித் ரசிகரான தன்னால் அஜித்துடன் ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ள முடியாத நிலை குறித்து சமீபத்திய நேர்காணலில் மோகன் ஜி கவலையுடன் பகிர்ந்துள்ளார்.


பகாசுரன் பற்றி தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:


”நான் அஜித் சாரின் ஃபேன். நடிகர் ரிச்சர்ட்  உடன் ஒரு படம் முடித்துவிட்ட பின் எனக்கு அஜித் சாரை சந்திக்க வாய்ப்பு கிடைத்து கொண்டு தான் இருந்தது. அவர்களது குடும்ப நிகழ்வுகள் நடைபெறும். அவற்றுக்கு ரிச்சர்ட் என்னை அழைப்பார். ஆனால் நான் வேண்டுமென்றே அவற்றை தவிர்த்து விடுவேன்.


’இவர்களால் தான் பயம்’


ஏற்கெனவே என்னை திட்டுகிறார்கள். நான் அவரை சந்திக்கச் சென்றால் நிச்சயம் ஒரு ஃபோட்டோ எடுக்க ஆசையா இருக்கும். அப்படி எடுத்து அந்த ஃபோட்டோ வெளியே வந்தால் இவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்தே நான் அவற்றைத் தவிர்த்து விட்டேன்.


எனக்கு அஜித் சாரை சந்திக்கும் ஆசை உள்ளது. பகாசுரன் இந்த கலரை மாத்தும். இவன் இப்படி மட்டும் படம் எடுக்க மாட்டான்; இப்படியும் எடுப்பான் என ஒரு இமேஜ் வரும். இதுக்கு அப்புறம் அந்த இமேஜ கொடுங்க. நான் சென்று அவருடன் சூப்பராக ஒரு ஃபோட்டோ எடுத்து அதை பகிரணும்” எனப் பேசியுள்ளார்.