நடிகர் தனுஷ் நடிப்பில் நாளை வெளியாகும் வாத்தி படத்துக்கு புது சிக்கல் எழுந்துள்ளது. படத்தின் தலைப்பு ஆசிரியர் சமூகத்தை அவமதிப்பதாக, ஆசிரியர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது. 


தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் ’வாத்தி’ படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும் சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாத்தி’ படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியாகி இருந்தன. தொடர்ந்து கடந்த நவம்பர் 10 ஆம் தேதி வாத்தி படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளாக வா வாத்தி பாடல் வெளியானது. தனுஷ் எழுதிய இந்த பாடலை ஸ்வேதா மோகன் பாடியிருந்தார்.


முன்னதாக, படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், வெளியீடு தள்ளிப் போனது. நாளை (பிப்ரவரி 17 ஆம் தேதி) படம் வெளியாக உள்ளது. 




ஆசிரியர் தரப்பில் இருந்து  எதிர்ப்பு


இந்த நிலையில் படத்தின் பெயருக்கு ஆசிரியர் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை  முன்னாள் ஆசிரியரும் முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலருமான முனைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறும்போது. பிப்ரவரி 17 முதல் வெளிவர உள்ள திரைப்படமான "வாத்தி" என்ற படத்தின் பெயர் பல லட்சக்கணக்கான ஆசிரியர்களின் மனதை வேதனைப்பட வைத்துள்ளது. எனவே இப்படத்தின் பெயரை மாற்றி ஆசிரியர்களின் கவுரவத்தை காக்குமாறு வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். 


அதேபோல புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், ’’மாதா, பிதா வரிசையில் தெய்வத்துக்கே முந்தைய இடத்தை ஆசிரியர்தான் பிடித்துள்ளார். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் உன்னதமான சமூகம் ஆசிரியர்கள் சமூகம் ஆகும். 


நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் விரைவில் (17-02-2023) திரைக்கு வர உள்ளது. அதற்கு, "வாத்தி" என்று பெயர் வைத்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதே படம் தெலுங்கில் "சார்" என்ற பெயரில் வெளியாகிறது.


தமிழில் மட்டும் தரக்குறைவான கொச்சையான வார்த்தையில், ஆசிரிய சமூகத்தை அவமதிக்கும் வகையில் "வாத்தி" என்று பெயரிட்டு வெளியிடப்படுகிறது. இதைக் கண்டிப்பதோடு படத்தின் பெயரை மரியாதையான வார்த்தைகளால் " வாத்தியார்" என்றோ, தெலுங்கில் வைத்ததுபோல "சார்" என்றோல் படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும்.


இதற்கு ஆசிரியர்கள் சார்பாக , அமைப்பின் சார்பாகவும் தாங்கள் குரல் கொடுக்கவும், நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.