பிரவீன் ஹிங்கோனியா இயக்கத்தில் வெளியாக உள்ள தி க்ரியேட்டர் சார்ஜானர் எனும் படம் லவ் ஜிஹாத்தை ஊக்குவிப்பதாகக் கூறி பஜ்ரங் தள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


பஜ்ரங் தள்:


வரும் மே 26ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், தயானந்த் ஷெட்டி, ஷாஜி சவுத்ரி ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், பஜ்ரங் தள் அமைப்பினர் நேற்று குஜராத், அகமதாபாத்தில் உள்ள மல்டிப்ளெக்ஸ் திரையரங்கம் ஒன்றின் முன் இப்படத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  


 






படத்தை ராஜேஷ் கராத்தே 'குருஜி' என்பவர் கருத்தியல் செய்து தயாரித்துள்ளார், மேலும் பிரவீன் ஹிங்கோனியா எழுதி இயக்கியுள்ளார். இப்படம் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் 2023 மே 26 அன்று வெளியாகிறது. 


தயாரிப்பாளர் கேள்வி:


இந்நிலையில் படத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் இது குறித்து முன்னதாகப் பேசியுள்ள படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் கராத்தே குருஜி,  “உலகத்தை மாற்ற முடியும் என்பதை நாங்கள் காட்ட முயற்சித்தோம். நான் எந்த அச்சுறுத்தல்களுக்கும் பயப்படவில்லை, போராட்டக்காரர்கள் தங்கள் மதத்தை விரும்புகிறார்கள். எனக்கு அதில் எந்தப் பிரச்னையும் இல்லை.


ஆனால், அனைத்து மதத்தினரும் தங்கள் பெயரில் கலவரம் அல்லது வன்முறையை செலுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மதத்தை காக்க ஒரு மனிதனை ஏன் கொல்கிறீர்கள்? மதத்தைக் கொன்று மனிதனைக் காக்க வேண்டும். உங்கள் குடும்பத்தை நீங்கள் இழக்க விரும்புகிறீர்களா?" எனப் பேசியுள்ளார்.


ஒரே உலகம், ஒரே மதம்:


இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த  மே 10ஆம் தேதி அன்று வெளியான நிலையில், ‘ஒரே உலகம், மதம்’ என்ற கருத்தை மையப்படுத்தி ட்ரெய்லர் அமைந்திருந்தது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் போது பேசிய நடிகர் ​​தயானந்த் ஷெட்டி, “இப்படத்தின் கதை மிகவும் தனித்துவமானது மற்றும் சக்தி வாய்ந்தது, நான் உடனடியாக படத்துக்கு ஒப்புக்கொண்டேன். படம் எல்லைகள் இல்லாத உலகத்தைப் பற்றி பேசுகிறது.


'ஒரே உலகம் ஒரே மதம்' என்ற கருத்தை முழுமையாக நம்பி, தனது புரட்சிகர சிந்தனைகளால் உலகை மாற்ற விரும்பும் டாக்டர் ரே என்ற விஞ்ஞானியாக நான் இப்படத்தில் நடித்துள்ளேன். எனது கதாபாத்திரத்தையும் படத்தையும் மக்கள் விரும்புவார்கள் என்று உறுதியாக நான் நம்புகிறேன்” எனப் பேசியுள்ளார்.


முன்னதாக கடந்த மே 6ஆம் தேதி வெளியான தி கேரளா ஸ்டோரி படம் இஸ்லாமிய வெறுப்பை ஊக்குவிப்பதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், பல எதிர்ப்புகளைக் கடந்து இப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இந்நிலையில், தற்போது தி க்ரியேட்டர் சார்ஜனார் எனும் இப்படத்துக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.