பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி திறந்துவைக்க உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்,  பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள் இடம்பெற்றுள்ளன.


நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா:


இந்தியாவை ஆட்சி செய்து அதிகாரம் செலுத்துவதற்கான புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை, வரும் 28ம் தேதியன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த சூழலில் புதிய நாடாளுமன்றம் உருவான விதம் மற்றும் அதில் உள்ள வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.


பழைய நாடாளுமன்ற கட்டட வரலாறு:


தற்போது பயன்பாட்டில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்திற்கு கடந்த 1921ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து 6 ஆண்டுகளில் அதாவது 1927-ல் 6 ஏக்கர் பரப்பளவிலான அந்த கட்டடம் முழுமை பெற்றது.  ஆங்கிலேயர் ஆட்சியின் போது கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட இந்த கட்டடத்தில், இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் கூடும். தொடர்ந்து 1956-ம் ஆண்டில், தற்போதைய கட்டடத்தில் 2 மாடிகள் சேர்க்கப்பட்டன.


வசதிகளும், சிக்கல்களும்:


காலப்போக்கில் நாடாளுமன்றத்தின் தேவைகள் அதிகரித்தாலும், அங்கு போதிய இடவசதி இல்லை. இதனால் இரு அவைகளின் கூட்டு அமர்வின்போது, மைய மண்டபத்தில் 436 பேர் மட்டுமே அமர முடியும் என்று இருந்தது. கூட்டுக் கூட்டம் நடக்கும் போதெல்லாம் சுமார் 200 நாற்காலிகள் தற்காலிகமாக ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. இது தவிர, 100 ஆண்டுகளை நெருங்கும் இக்கட்டடம் சற்றே பலவீனமாக காணப்படுகிறது.


அதேநேரம், இனிவரும் காலங்களில் நாடு முழுவதும் தொகுதிகள் மறுபங்கீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளதால், உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது. இதனால், புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்ட, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.




புதிய நாடாளுமன்ற கட்டடம்


புதிய நாடாளுமன்ற கட்டடம்:


இதையடுத்து புதிய நாடாளுமன்ற கட்டடம் 1200 கோடி ரூபாய் செலவில், 18 ஏக்கர் அளவுக்கு அதாவது 64,500 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.  தன்னம்பிக்கையின் அடையாளமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட உள்ளது. பாரம்பரிய கலைப் படைப்புகள், தொலைநோக்கு பார்வை மற்றும் இந்திய கட்டடக்கலை திறன் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டடம், இரண்டு ஆண்டுகள் 5 மாதம் 18 நாட்களில் கட்டப்பட்டுள்ளது.


உட்புற வசதிகள்;


 இரு அவைகளின் கூட்டுக் கூட்டங்களுக்கு மக்களவை பயன்படுத்தப்படுகிறது. 888 இருக்கைகள் கொண்ட மக்களவை மண்டபத்தில் மொத்தம் 1272 இருக்கையில் பொருத்தப்பட்டு உள்ளன. உறுப்பினர்கள் வாக்களிக்க வசதியாக இருக்கைகளில் பயோமெட்ரிக்ஸ், டிஜிட்டல் மொழிபெயர்ப்பு சாதனங்கள், மாற்றக்கூடிய மைக்ரோ போன்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கையிலும் மல்டிமீடியா காட்சி வசதி உள்ளது. கேலரிகளில் எங்கு அமர்ந்தாலும் சாமானியர்கள் தெளிவாகத் தெரியும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு விசேஷ மற்றும் நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு மொத்தம் 530 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.




புதிய நாடாளுமன்ற கட்டடம்


வரலாற்றுப் படங்கள்:


முக்கோண வடிவிலான புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பிரதான வாயில்களுக்கு அறிவு, சக்தி, கர்மா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த 3 வாயில்களுக்கு அருகில் ஆயிரக்கணக்கான ஆண்டு இந்திய வரலாற்றை விளக்கும் வெண்கலப் படங்கள் நிறுவப்பட்டுள்ளன. அறிவு வாயில் அருகே நாளந்தாவின் உருவங்கள். மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையின் காட்சிகள், கர்மா வாயிலின் ஒருபுறம் கோனார்க், சக்ரா மற்றும் மறுபுறம் சர்தார், வல்லபாய் படேல், பாபாசாஹேப் அம்பேத்கார் வெண்கல சிலைகள் உள்ளன. அனைத்து மாநிலங்களின் ஓவியங்களும் சிற்பங்களும் இதில் வைக்கப்பட்டுள்ளன. 


மற்ற வசதிகள்:



  • புதிய பாராளுமன்றம், மத்திய விஸ்டா கட்டிடங்களின் வரிசையில் கட்டப்பட்டுள்ளது, இது ஒரு முக்கோண அமைப்பாகும். இது மக்களவை, மாநிலங்களவை, மத்திய ஓய்வு அறை மற்றும் அரசியலமைப்பு அதிகாரிகளின் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

  • புதிய லோக்சபா சேம்பர் இந்தியாவின் தேசிய பறவையான மயிலைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், புதிய ராஜ்யசபா சேம்பர் தேசிய மலரான தாமரைக்கு ஒத்திருக்கிறது.

  • புதிய கட்டிடத்தில் ஆறு கமிட்டி அறைகள் இருக்கும். தற்போதைய அமைப்பில் இதுபோன்ற மூன்று அறைகள் உள்ளன.

  • அமைச்சர்கள் சபையின் பயன்பாட்டிற்காக 92 அறைகள் இருக்கும்.

  • புதிய கட்டிடத்தில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் உள்ள ஒவ்வொரு பெஞ்சிலும் இரண்டு உறுப்பினர்கள் அருகருகே அமர முடியும் 

  • புதிய கட்டிடத்தில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி அமைப்புகள் இடம்பெறும். கட்டிடம் முழுவதும் 100% யுபிஎஸ் பவர் பேக்கப் வழங்கப்படும்.