நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம் பாபா. இந்த திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களில் இயக்குநராக பணியாற்றி ரஜினிக்கு தொடர் வெற்றிகளை பரிசளித்த சுரேஷ் கிருஷ்ணா நான்காவது முறையாக இந்தப்படத்தில் அவருடன் இணைந்தார்.
இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப்படத்தில் பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குநர்களாக பணிபுரிந்தனர்.
வழக்கமாக ரஜினிகாந்த் படங்களுக்கு இருக்கும் அமோகமான வரவேற்பு இப்படத்திற்கும் இருந்தது. இருப்பினும் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாமல் படம் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப்படம் மீண்டும் ரீரிலிஸ் செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி புது பொலிவுடன் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் மாற்றப்பட்டு படம் கடந்த 10 ஆம் தேதி மீண்டும் வெளியிடப்பட்டது. படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
மேலும் ஒரு சாரார் படத்தில் கிளைமேக்ஸ் மாற்றப்பட்டுள்ளதாகவும், இப்போதும் பார்ப்பதற்கும் படம் நன்றாகவே இருப்பதாகவும் என்று கருத்துக்களை தெரிவித்தனர். இன்னொரு சாரார் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளை இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்திருக்கலாம் என்று கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் பாபா படத்தின் வசூல் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த தகவல்களின் படி, தமிழ்நாட்டில் பாபா திரைப்படம் 80 லட்சமும், கர்நாடகாவில் 7.5 லட்சமும், இவை தவிர்த்து இந்தியாவின் பிற மாநிலங்களில் 5 லட்சமும், வெளிநாடுகளில் 50 லட்சமும் ஆக மொத்தத்தில் உலகம் முழுவதும் 1.4 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.