வாரணாசியில் செமி விரைவு வந்தே பாரத் விரைவு இரயிலில் (VARANASI Semi-high-speed Vande Bharat Express ) விரைவில் படுக்கை வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw) தெரிவித்துள்ளார்.


வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி:


வந்தே பாரத் இரயில்கள், தற்போது அமர்ந்து பயணிக்கும் வசதியுடன் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தொலைதூரம் இயக்கப்படும் வந்தே பாரத் இரயில்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும், படுக்கை வசதியுடன் கூடியதாக மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


வாரணாசியில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள அமைச்சர், வாரணாசி - தமிழ்நாடு இடையே காசி-தமிழ் சங்கமம் சிறப்பு இரயில் சேவையை அறிமுகம் செய்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ( Banaras Hindu University-BHU) நடைபெற்று வரும் காசி-தமிழ்ச் சங்கத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இந்த புதிய இரயில் சேவை அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.


காசி தமிழ்சங்கமம்:


சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மத்திய கல்வி அமைச்சகமும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட காசி-தமிழ் சங்கமம் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையேயான நூற்றாண்டு பழமையான கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை இன்னும் வலுப்படுத்தும். கடந்த நவம்பர் மாதம் பிரதமர் மோடி, நாடு சுதந்திரமடைந்து 75-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக காசி-தமிழ் சங்கமத்தைத் தொடங்கி வைத்தார். 


30 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நேற்று (10..11.2022 -சனிக்கிழமை) அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.


மேலும், வாரணாசி சுற்றுப்பயணத்தின் முதல் நாளான நேற்று வாராணாசி இரயில் நிலையத்தில்  நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.  இந்த ஆய்வின் போது அமைச்சருடன் இருந்த  வடக்கு இரயில்வேயின்  அதிகாரிகள், ”தொலைதூர வந்தே பாரத் இரயில் பெட்டிகளில் படுக்கை வசதி கொண்டதாக அமைப்பதன் மூலம் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.” என்று தெரிவித்தனர். 


ஓராண்டில் செயல்படுத்தப்படும்:


அதற்கு பதிலளித்த அமைச்சர் , வந்தே பாரத் இரயிலின் புதிய அவதாரம் இன்னும் 12 முதல் 13 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.


இதற்கிடையில், வாரணாசி சந்திப்பில் நடந்து வரும் யார்டு மறுவடிவமைப்பு பணிகள் ரயில் போக்குவரத்தை எளிதாக்கும் என்றும் வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பணி மார்ச் 2023க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.