நடிகர் இயக்குநருமான சசிகுமார் அயோத்தி படத்தை முன்னதாக தன் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார்.
அயோத்தி பார்த்த சசிகுமார்:
சசிகுமார் தன் அடுத்த படமான நந்தன் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக முன்னதாக தஞ்சாவூர் வந்திருந்தார். அப்போது சசிகுமார் தஞ்சாவூர், ராணி பேரடைஸ் திரையரங்கில் அயோத்தி படத்தை பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த சசிகுமார், சாதி மதம் எல்லாம் தாண்டி மனிதம் தான் முக்கியம். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற விஷயம் இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எல்லோரும் கடந்து வந்துள்ள செய்தியை தான் இந்தப் படத்திலும் சொல்லியிருக்கிறோம். நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
வடமாநிலத்தவர்களுக்கு உதவி:
தமிழர்களாகிய நாம் வட மாநிலத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம், அதுதான் இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கதை எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கிற ஒரு விஷயம் தான். இந்தப் படத்தில் வருவது போல் துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை நல்லடக்கம் செய்து வருகிறார். மதுரையிலும் இதுபோல் ஒருவர் இருக்கிறார். எல்லோர் வாழ்க்கையிலும் கடந்து வந்த விஷயம்தான் இது” எனப் பேசியுள்ளார்.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள அயோத்தி படத்தில் சசிகுமாருடன் ப்ரீத்தி அஸ்ரானி, யஷ் பால் ஷர்மா, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரம் வரும் குடும்பத்தினருக்கு மத வேறுபாடுகளைத் தாண்டி மனிதத்துடன் உதவுவதைப் பேசும் படமாக அயோத்தி அமைந்துள்ள நிலையில், இப்படத்துக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கம்பேக் மூவி:
மேலும் சசிகுமார் நீண்ட காலத்துக்குப் பிறகு இப்படத்தில் ரீ - எண்ட்ரி தந்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். மேலும் படம் வெளியானது முதல் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில் மற்றொருபுறம் அயோத்தி படத்தின் கதை யாருடையது என்பது தொடர்பாக சர்ச்சை வெடித்தது.
ஒருபக்கம் தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானவரான எஸ்.ராமகிருஷ்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ள நிலையில், மற்றொருபுறம் எழுத்தாளர் மாதவராஜ் ‘அழக்கூடத் திராணியவற்றவர்கள்’ எனும் தன் கதையை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் மற்றும் எழுத்தாளர் எஸ்.ராவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
எஸ்.ரா ஒருபுறம் படம் வெற்றி பெற்றது குறித்து ஃபேஸ்புக்கில் வாழ்த்தி மகிழ்ந்த நிலையில், மற்றொருபுறம் மாதவராஜின் இந்தப் பதிவு சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அயோத்தி படத்துக்காக எஸ்.ராவை நேரில் சந்தித்து பல கதைகள் கேட்டு இறுதியாக அயோத்தி படத்தின் கதையை தேர்வு செய்ததாக அ.மந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.