அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், பாலிவுட், டோலிவுட் தொடங்கி தமிழ் சினிமா வரை ஏராளமான பிரபலங்கள் அழைப்பின் பேரில் கலந்துகொண்டனர்.
ராமர் கோயில் (Ayaodhya Ram Mandhir) நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று அயோத்தி பயணித்த நடிகர் ரஜினிகாந்த், அயோத்தி கோயிலுக்குச் செல்வதும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்து, செய்தியாளர்களிடம் விடைபெற்றார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் சரி, தவறு என்பதை தாண்டி தனக்கு ரஜினிகாந்தின் கருத்தில் விமர்சனம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ப்ளூ ஸ்டார் பட செய்தியாளர் சந்திப்பில் பேசிய பா.ரஞ்சித் (Pa.Ranjith) தெரிவித்ததாவது:
“ராமர் கோயில் திறப்பு இன்று நடக்கிறது, ஆனால் அதன் பின்னாடி நடக்கும் மத அரசியல நாம கவனிக்க வேண்டி இருக்கு. அதற்கு இருக்கும் ஆதரவு, எதிர்ப்பு மீறி இதுமாதிரி ஒரு விஷயம் நடக்கக்கூடாதுனு நினைக்கறதே இன்னைக்கு பெரிய பிரச்னையா மாறிட்டு இருக்குங்கறத நான் பாக்கறேன். சிக்கலான ஒரு சூழல் இருக்கு.
பராசக்தி பட டயலாக்கின்படி “கோயில் கூடாது என்பது இல்ல, கோயில் கொடியவர்களின் கூடாராமா மாறிடக்கூடாதுங்கறது” என்பது தான் நம்முடைய கவலை. கடவுள் நம்பிக்கை என்பதைதாண்டி, இது அரசியலாக்கப்படுவது தான் சிக்கல்.
ரஜினிகாந்த் (Rajinikanth) அயோத்திக்கு போனது அவரோட விருப்பம். இதுமாதிரி விஷயங்களில் அவரோட கருத்தை ஏற்கெனவே சொல்லி இருக்காரு. 500 ஆண்டு பிரச்னை தீர்ந்திருக்குனு சொல்றாரு. ஆனா இதுக்கு பின்னாடி இருக்கும் அரசியல் பற்றி நாம கேள்வி கேக்க வேண்டி இருக்கு. அவர் பேசியது தப்பு, சரி என்பதைத் தாண்டி எனக்கு அதில் விமர்சனங்கள் இருக்கு” எனப் பேசியுள்ளார்.