சிறப்புத் தேவை உள்ள மாணவர்கள், தங்களின் தேவைகளையும் சலுகைகளையும் அறிந்துகொள்வதற்காக தனி வலைப்பக்கத்தை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது. 2024 பொதுத் தேர்வை முன்னிட்டு இந்த வலைப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.


பொதுத் தேர்வு எழுத உள்ள சிறப்புத் தேவை உள்ள குழந்தைகளின் (children with special needs) தகவல்களை இதில் நிரப்ப வேண்டும் என்றும் பரிக்‌ஷா சங்கம் வலைப்பக்கத்தில் அவர்களின் நிலையை அப்டேட் செய்ய வேண்டும் எனவும் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 24ஆம் தேதி வரை இந்தப் பக்கம் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறப்புத் தேவை மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்


இதுகுறித்து சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ’’ஒவ்வோர் ஆண்டும் சிறப்புத் தேவை உடைய குழந்தைகள், தேர்வுக்கு முன்பு வந்து, தங்களின் தேவைகள் மற்றும் சலுகைகள் குறித்துத் தெரிவிப்பர்.தேர்வுகளின்போது தேவைப்படும் சலுகைகளைப் பெற விரும்பும் சிறப்புத் தேவை மாணவர்கள், சிபிஎஸ்இ அனுமதிக்கும் வகையில்இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


பயன்படுத்துவது எப்படி?


பள்ளிகள், தங்களின் லாகின் ஐடி, கடவுச் சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, போர்ட்டரில் நுழையலாம். அதில், ஒவ்வொரு வகை மாணவர்களுக்கும் அவர்களின் இயலாமைக்கு/ சிறப்புத் திறனுக்கு ஏற்ப அனுமதிக்கப்பட்ட வசதிகள் குறித்து பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும். அதைத் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.


போதிய அறிவுறுத்தல்


இதில் தங்களுக்குத் தேவையான வசதிகளை/ சலுகைகளை மாணவர்கள் தேர்வு செய்து, பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்த விவரங்கள் தேர்வுக்கான அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்படும். தேர்வு மைய கண்காணிப்பாளர் போதிய ஏற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 24ஆம் தேதி வரை இந்தப் பக்கம் இயங்கும்’’ என்று சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்துள்ளது.


10,12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள், பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெறுகின்றன.


எப்போது தேர்வு?


வழக்கமாக 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் காலை 10.30 மணி முதல் 01.30 மணி வரை நடைபெற உள்ளன. சில தேர்வுகள் 12.30 மணியுடன் முடிவடைகின்றன.


தமிழக மாணவர்களுக்கு எப்போது?


தமிழக மாநில பாடத்திட்டத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2024ஆம் ஆண்டு ஆண்டு மார்ச் 18ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதியும் பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.


இதையும் வாசிக்கலாம்: CBSE Exam Date 2024: சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு - முழு விவரம்!