அயலான் திரைப்படத்தின் மாஸான மேக்கிங் வீடியோவினை படக்குழு பகிர்ந்துள்ளது.


ரூ.50 கோடி வசூல்


பூமிக்கு வரும் ஏலியன் கதையை மையப்படுத்தி, சிவகார்த்திகேயன் நடிப்பில், ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் பொங்கல் ஸ்பெஷல் படமாக வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் அயலான்.


ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்க, கருணாகரன், யோகி பாபு, ஈஷா கோபிகர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், நேற்றுடன் உலகம் முழுவதும் ரூ.50 கோடிகளை அயலான் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


அப்ளாஸ் அள்ளும் ஏலியனின் சிஜி காட்சிகள்


மேலும் சிறப்பான சிஜி (Computer Graphic) காட்சிகள், தத்ரூபமாக திரையில் ஏலியனைக் கொண்டு வந்த விதம் ஆகியவற்றால் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று இப்படம் வசூலிலும் ஏறுமுகத்தில் பயணித்து வருகிறது. குழந்தைகளைக் குறிவைத்து ஏலியனுடன் திரையைப் பகிர்ந்து சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடனம், ஆக்‌ஷன் என நடித்துள்ள நிலையில், படக்குழுவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சிவகார்த்திகேயனின் ‘குழந்தை ஆடியன்ஸ்கள்’ திரையரங்குக்கு படையெடுத்து வருகின்றனர்.


அசத்தலான மேக்கிங் வீடியோ!


சுமார் 8 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு அயலான் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அயலான் படத்தின் மேக்கிங் வீடியோவினை படத்தின் தயாரிப்பு நிறுவனமா கேஜெஆர் ஸ்டுடியோஸ் தற்போது பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவில் 2015ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனை சந்தித்து அயலான் குறித்த ஐடியாவை தான் தெரிவித்ததாகவும், இந்த ஐடியாவுக்கு சிவகார்த்திகேயன் ஓகே சொன்னால் மட்டுமே தான் படமாக இதனை எடுக்க இருந்ததாகவும் இயக்குநர் ஆர்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


மேலும் இன்று நேற்று நாளை படத்தை தான் திரையரங்கில் பார்த்ததால் தான் அயலான் படத்துக்கு உடனடியாக ஒப்புக்கொண்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிஜி வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், ஹாலிவுட்டில் தான் இப்படிப்பட்ட படங்களை பார்த்துள்ளோம் என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, தயாரிப்பாளர் உள்ளிட்டோரின் கருத்துகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.


4500 ஷாட்கள், ‘ஏலியன்’ நடிகர்


மேலும் படத்தின் ஸ்டோரி போர்டு பணிகள், ஏலியனின் உருவாக்கம் ஆகியவை பற்றியும் படக்குழுவினர் சுவாரஸ்யத் தகவல்களை தெரிவித்துள்ளனர். மொத்தம் 4,500 ஷாட்கள் படத்தில் இருந்ததாகவும், புயலுக்கு இடையே அயலான் படத்தினை எடுத்தாகவும், படிப்படியாக படத்தினை உருவாக்கியதாகவும் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.


மேலும் ஏலியனின் டம்மி பொம்மை ஒன்றை வைத்து படம் முழுக்க உருவாக்கியதாகவும், ஏலியன் சார்ந்து மட்டும் 2,500 ஷாட்டுகள் இருந்ததாகவும் படக்குழு பல ஆச்சரியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளது. ஏலியன் பாத்திரமாக வெங்கடேஷ் எனும் நடிகர் நடித்ததாகவும், சண்டைக்காட்சிகளில் அன்பறிவு மாஸ்டரின் ஆலோசனைப்படி ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் நடித்ததாகவும், மேலும் ஆளே இல்லாமல் பல காட்சிகளில் ஏலியனுடன் தான் நடித்ததாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


 



மேலும் அயலான் பட உருவாக்கம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.


மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!


Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!